June 25, 2018
தண்டோரா குழு
கோவை குற்றால அருவியில் குளித்து கொண்டிருந் தபோது இளைஞர் ஒருவர் வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.உயிரிழந்தவரின் விபரம் குறித்தும்,உடன் வந்தவர் குறித்தும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
கனமழை காரணமாக கோவையில் நீர்ப்பிடிப்பு பகுதிகள்,ஆறு,குளம் என நீர்நிலைகள்,அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து,கடந்த 9 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை கோவை குற்றால அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.
மழை அளவு குறைந்ததையடுத்து,கடந்த 21ம் தேதி முதல் மீண்டும் கோவை குற்றாலத்திற்கு பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர்.இந்நிலையில்,கோவை குற்றால அருவியில் குளித்து கொண்டிருந்த போது இளைஞர் ஒருவருக்கு வலிப்பு ஏற்பட்டதாக தெரிகிறது.உடனே,அவரை வெளியே கொண்டு வந்தபோது உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து தகவலிறிந்த வனத்துறை மற்றும் காவல்துறையினர் உடலை கைப்பற்றி உயிரிழந்தவரின் விபரம்,அவருடன் வந்ததாக சொல்லப்படும் நபர்,சிசிடிவி காட்சிகள்,குற்றால அருவி நுழைவாயில் கட்டண பதிவு புத்தகம் ஆகியவை கொண்டு காருண்யா நகர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.அருவியில் தண்ணீர் மிகவும் குளிர்ச்சியான இருந்ததால் வலிப்பு ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.மேலும்,அருவியில் போதுமான மருத்துவ சிகிச்சை இல்லையென்றும் குற்றச்சாட்டப்படுகிறது.