August 24, 2018
தண்டோரா குழு
கோவை கிருஷ்ணாம்பதி குளத்தில் இறந்து மூன்று நாட்கள் ஆன நிலையில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கோவை தொண்டாமுத்தூர் சாலையிலுள்ள கிருஷ்ணாம்பதி குளத்தில் ஆண் சடலம் ஒன்று தலைகுப்புற கிடக்கும் நிலையில் மிதப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இத்தகவலின் பேரில் ஆர்.எஸ் புரம் காவல்நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சடலத்தை மீட்டனர்.
முகம் நீருக்கு அடியில் மூன்று நாட்கள் ஊறியதால் மீன்கள் அரித்து சிதையுண்டு காணப்படுகிறது. இதனால் இறந்தவர் யார் என்பதை அடையாளம் காணமுடியவில்லை. எனினும், அப்பகுதியில் கடந்த சில தினங்களாக சுற்றி திரிந்த நபர்தான் இறந்தவர் என அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர். இதையடுத்து, உடலை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.