March 26, 2018
தண்டோரா குழு
மக்களுக்கு ஏற்றவாறு கோவை காந்திபுரம் மேம்பாலத்தை பயனுள்ள வகையில் மாற்றி அமைக்கப்படும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
கோவை தொண்டாமுத்தூரில் ஜெயலலிதாவின் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு 86 எழை ஜோடிகளுக்கு திருமணம் ,உக்கடம் – ஆத்துப்பாலம் இடையே 215.51 கோடி மதிப்பில் 1.94 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேம்பாலத்திற்கு அடிகல் நாட்டுதல், தொண்டாமுத்தூர் பவானி கூட்டு குடி நீர் திட்டத்தினை மக்களுக்கு அர்பணித்தல் ஆகியவை சேர்த்து முப்பெரும் விழாவாக இன்று நடத்தப்பட்டது. இந்த விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி , துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு திருமணங்களை நடத்தி வைத்தார்.
பின்னர் விழாவில் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி,
தன்னுடைய பிறந்தநாள் விழாவை ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும் என ஜெயலலிதா உத்தரவு பிறப்பித்திருந்தார். அவர் இல்லை என்றாலும் தொடர்ந்து திருமண நிகழ்சிகளை இந்த அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மதசார்பற்ற அரசாக இந்த அரசு திகழ்ந்து வருவதற்கு இந்நிகழ்ச்சியே ஒரு உதராணம் இன்றைய திருமண நிகழ்ச்சியில் இஸ்லாமியம், கிருஸ்துவ முறைப்படி திருமண நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது
பெண்களுக்கு முன்னுரிமை தரும் அரசாக அம்மா அரசு செயல்பட்டு வருகிறது. கடைப்பாறை வைத்து இடித்தாலும் இந்த ஆட்சியை அசைக்க முடியாது, கனவிலும் பலிக்காது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க திமுக ஆட்சி காலத்தில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என புகார்
6 வாரத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என உச்சநீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இனி நான்கு நாட்கள் உள்ளது. அமையும் என எதிர்ப்பார்க்கிறோம். இல்லை என்றால் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும் என்றார்.
மேலும், அகில இந்திய அளவில் உயர்கல்வி துறையில் தமிழகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கோவை, சேலம், மதுரை போன்ற பெரிய நகரங்களில் ஏர்போர்ட் போன்று பஸ்போர்ட் அமைக்க மத்திய அரசிடம் கேட்டுள்ளோம், விரைவில் அமைக்கப்படும். காந்திபுரத்தில் புதிதாக கட்டப்பட்ட மேம்பாலம் சரியில்லை என நாளிதழ்களில் வந்த செய்திகளை பார்த்தேன். மக்களுக்கு ஏற்றவாறு காந்திபுரம் மேம்பாலத்தை பயனுள்ள வகையில் மாற்றி அமைக்கப்படும். மக்கள் நலனே முக்கியம் என கூறி மணமக்களை வாழ்த்தி தனது உரையை முதல்வர் பழனிசாமி முடித்துக் கொண்டார்.