May 28, 2018
தண்டோரா குழு
கோவை அருகே உள்ள கருமத்தம்பட்டியில் தமிழர்களின் பாரம்பரிய நடனமான ஒயிலாட்ட அரங்கேற்றம் நடைபெற்றது.
வண்ண உடைகளை உடுத்தி அமர்ந்தும், நிமிர்ந்தும் லவகமாக வளைந்தும் ஆடும் இந்த கலை தான் ஒயிலாட்டம். தமிழர்களின் பாரம்பரிய கலைகளில் ஒன்றாகவும், கலாச்சாரத்தை பறைசாற்றும் விதமான இந்த ஒயிலாட்டம், தற்போது கொங்கு மண்டல மக்கள் ஆர்வமுடன் கற்று வருகின்றனர். கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அடுத்த செம்மாண்டம்பாளையம் ஒயிலாட்ட அரங்கேற்றம் ஞாயிறன்று இரவு நடைபெற்றது. இதில் 5 வயது முதல் 50 வயது வரை 80 நபர்கள் அரங்கேற்றம் செய்தனர். அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றும் கனகராஜ், இலவசமாக கிராம தோறும் சென்று ஒயிலாட்ட கலையை வளர்த்து வருகிறார்.
கிராமிய பாடலுடன் மெதுவாக ஆரம்பித்து வேகமெடுக்கும் ஒயிலாட்டம் தொடர்ச்சியாக 3 மணி நேரம் நடைபெற்றது. ஒயிலாட்டம் ஆடும் போது, உடலையும் உள்ளத்தையும் ஒருங்கிணைந்து புத்துணர்வு ஏற்படுவதாக கலைஞர்கள் கூறுகிறார்கள். கடந்த 8 ஆண்டுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒயிலாட்டம் கலைங்கர்கள் உருவாகி இருப்பதாகவும், வரும் மாதங்களில் இந்த கலையை மலேசியா, இலங்கை ஆகிய நாடுகளில் பரப்பும் வகையில் அங்கு சென்று ஒயிலாட்ட நிகழ்ச்சியை நடத்த உள்ளதாகவும், இந்த கலையை தமிழர்கள் உள்ள நாடுகளில் பரப்ப திட்டமிட்டுள்ளதாக ஆசிரியர் கனகராஜ் தெரிவித்தார்.