February 7, 2018
தண்டோரா குழு
கோவை கண்ணம்மநாயக்கனூர் பகுதியில் குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கோவையை அடுத்த கண்ணம்மநாயக்கனூர் பகுதியில் நூறுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன் அரசு பேருந்துகளை சிறை பிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த ஒரு மாதமாக குடிநீர் வராததால் பல முறை அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் மனு அளித்துள்ளனர்.ஆனாலும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் திடீரென 4 அரசு பேருந்துகளை சிறை பிடித்து காலிகுடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அங்கு வந்த மதுக்கரை போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர், ஆனாலும் சம்மந்தபட்ட அதிகாரிகள் உறுதியளித்தால் தான் கலைந்து செல்வோம் என தெரிவித்தனர். இதையடுத்து கிணற்றை தூர் வார நடவடிக்கை எடுப்பதாகவும், உடனடியாக கூடுதல் தொட்டிகளை அமைத்து தருவதாகவும் தெரிவித்ததையடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். நான்கு மணி நேர போராட்டத்தால் அப்பகுதியில் பேருந்து இன்றி கடுமையான பாதிப்பு ஏற்பட்டது.