July 24, 2021
தண்டோரா குழு
கோவை ஒப்பணக்கார வீதி, கிராஸ்கட் வீதி, 100 அடி சாலை, காந்திபுரம், டவுன்ஹால், உக்கடம் உள்ளிட்ட கடைத்தெரு பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இப்பகுதிகளில் கொரோனா விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? என பறக்கும் படை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் தளர்வுகள் ஒரே மாதிரியாக அறிவிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனை அடுத்து கோவையில் ஜவுளி கடைகள், நகை கடைகள், பொது போக்குவரத்து மற்றும் அனைத்து வகையான கடைகளும் திறக்கப்பட்டன. இதனை அடுத்து புது துணிகள் வாங்க, பொருட்கள் வாங்க என மக்கள் கூட்டம் கோவையில் உள்ள கடைத்தெருக்களில் அதிகரித்து காணப்படுகிறது.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆனால் அதனையும் மீறி மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. மக்கள் கூட்டம் அதிகரிப்பு மற்றும் கொரோனா விதிமுறைகள் கடைப்பிடிப்பு உள்ளிட்டவற்றை கண்காணிக்க மாநகராட்சி சார்பில் 20 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதுதவிர வருவாய் துறை, காவல்துறை என பல்வேறு துறை அதிகாரிகள் தலைமையில் கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மக்கள் கூட்டத்தை தவிர்க்கவும், கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்கவும் வாகனங்களில் ஒலிப்பெருக்கி மூலம் விழிப்புணர்வு பிரச்சரம் செய்யப்படுகிறது. அதையும் மீறி விதிமுறைகளை மீறுபவர்கள் மீது அபராதம் விதிக்கப்படுகிறது.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் ஒருவர் கூறுகையில்,
‘‘கோவை மாநகர் பகுதியில் உள்ள ஜவுளிக்கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகள் ஆகியவை தமிழக அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்கிறார்களா?என பறக்கும் படை அதிகாரிகள் மூலம் தீவிரமாக கண்காணித்து வருகிறோம்.மக்களுக்கு விழிப்புணர்வும் ஒலிப்பெருக்கிகள் மூலம் ஏற்படுத்தப்படுகின்றன,’’என்றார்.