May 18, 2021
தண்டோரா குழு
கோவை இ.எஸ்.ஐ அரசு மருத்துவமனையில் 830 படுக்கைகள் உள்ள நிலையில், அதனை 1030 படுக்கைகளாக உயர்த்தி அனைத்து படுக்கைகளுக்கும் விரைவில் ஆக்சிஜன் வசதி அளிக்கப்படும் என இ எஸ் ஐ மருத்துவமனையின் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. நாள் ஒன்றுக்கு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி வருகிறது. கோவை மாவட்டத்தில் இதுவரை ஒரு இலட்சத்து 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
அதேசமயம் இரண்டாவது அலையின் தாக்கம் தீவிரமாக இருப்பதால் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. கடந்த 10 நாட்களில் மட்டும் 100 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.கொரோனா பாதிப்பால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பால், கோவையில் உள்ள மருத்துவமனைகள் அனைத்தும் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன.
மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள் அனைத்தும் நிரம்பிய நிலையிலேயே உள்ளன.
இதன் காரணமாக புதிதாக வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தாமதமாவதால், கூடுதல் படுக்கை வசதிகளை ஏற்படுத்த சுகாதாரத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்து இஎஸ்ஐ மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ரவிக்குமார் கூறுகையில், இ.எஸ்.ஐ அரசு மருத்துவமனையில் உள்ள 11 கே.எல் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் டேங்கில் இருந்து 88 லட்சம் லிட்டர் ஆக்சிஜன் நோயாளிகளுக்கு தங்கு தடையில்லாமல் வழங்கப்படுகிறது என்றார்.
மருத்துவமனை வளாகத்தில் நிமிடத்துக்கு 100 லிட்டர் ஆக்சிஜன் சப்ளை செய்யும் கருவிகள் உட்பட பல்வேறு பல்வேறு கொள்ளளவுகளில் 180 ஆக்சிஜன் ஜெனரேட்டர் கருவிகள் நிறுவப்பட்டுள்ளது எனவும், 830 படுக்கை வசதிகள் உள்ள நிலையில் 407 படுக்கைகளுக்கு ஆக்சிஜன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.830 படுக்கைகள் ஏற்கனவே உள்ள நிலையில் 200 படுக்கைகள் கூடுதலாக அமைக்கப்பட்டு,1030 படுக்கை வசதிகளாக விரைவில் தரம் உயர்த்தப்பட உள்ளது எனவும், இந்த வார இறுதிக்குள் ஆக்சிஜன் ஜெனரேட்டர் கருவிகள் பொருத்தப்பட்டு, அனைத்துப் படுக்கைகளும் ஆக்சிஜன் படுக்கைகளாக மாற்றப்பட இருப்பதாக தெரிவித்தார்.
இ எஸ் ஐ மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் மருத்துவர் ரவீந்திரன் மற்றும் மாவட்ட ஆட்சியர் நாகராஜன் மேற்பார்வையில் இப்பணிகள் நடைபெற்று வருவதால் விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என தெரிவித்தனர் .