February 2, 2018
தண்டோரா குழு
கோவை இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை குறித்து, என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு முகாமை புதிதாக வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.
கடந்த 2016 செப்டம்பர் மாதம்கோவையைச் சேர்ந்த இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார், மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த கொலை குறித்து விசாரணை நடத்திய கோவை போலீசார், குற்றவாளிகளை கைது செய்யாத நிலையில், அவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி. சிறப்பு புலனாய்வுக்குழுவுக்கு மாற்றப்பட்டது.
இதையடுத்து, சசிகுமார் கொலை வழக்கு தொடர்பாக சதாம் உசேன், சுபைர், முபாரக், சையது அபுதாகிர் ஆகிய 4 பேரை கைது செய்தது. விசாரணையில் இவர்களுக்கு அமைப்பு ரீதியான தொடர்புகள் இருப்பதாக தெரியவந்ததால் இவ்வழக்கு தேசிய புலனாய்வு முகாமைக்கு மாற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து, என்.ஐ.ஏ. அதிகாரிகள் கோவை சென்று தகவல்களைப் பெற்று ஆய்வு செய்தனர்.
இதைத் தொடர்ந்து, கேரள மாநிலம் கொச்சியில் உள்ள தேசிய புலனாய்வு முகாமை அதிகாரிகள் புதிதாக வழக்குப்பதிவு செய்து சசிகுமார் கொலை வழக்கின் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். மேலும், சென்னை – பூந்தமல்லியில் உள்ள என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றத்தில் முதல் தகவல் அறிக்கையையும் தாக்கல் செய்துள்ளனர்.