July 8, 2021
தண்டோரா குழு
கோவை மாவட்டத்தில் புகார்களை ஆட்சியரிடம் தெரிவிக்க வாட்ஸ் அப் எண் வெளியிடப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்ப்பு கூட்டம் நடந்து வந்தது. கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் குறைதீர்ப்பு கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் தற்போது ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டு பொதுப் போக்குவரத்து இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பலரும் கோவை ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க கூட்டமாக வருகின்றனர். ஆட்சியரிடம் நேரில் மனு கொடுக்க அனுமதி இல்லாததால் அலுவலக வளாகத்தில் உள்ள பெட்டியில் மனுக்களை போட்டு செல்கின்றனர்.
இந்நிலையில் பொதுமக்கள் நேரில் வருவதையும், கூட்டம் கூடுவதையும் தவிர்க்கும் வகையில் ஆன்லைன் வாயிலாக மனுக்கள் பெற முடிவு செய்யப்பட்டது. இதன்படி தற்போது பொதுமக்கள் தங்கள் குறைகள் மற்றும் புகார்களை கோவை மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிக்க 9487570159 என்ற வாட்ஸ்-அப் எண் வெளியிடப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தெரிவிக்கும் குறைகள் மற்றும் புகார்கள் மீது விசாரணை நடத்தி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ். சமீரன் உறுதியளித்துள்ளார்.