January 26, 2018
தண்டோரா குழு
கோவை அருகே கிராம சபா கூட்டத்திற்கு அரசு அதிகாரிகள் வர கால தாமதம் ஏற்பட்டதால், ஐந்து கல் ஆட்டம் ஆடியபடி பொதுமக்கள் காத்திருந்த காட்சிகள் வெளியாகியுள்ளன.
கோவை மாவட்டம் பெரிய நாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதி அசோகபுரம் ஊராட்சி. இங்கு இன்று கிராம சபை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.இந்நிலையில் காலை 11 மணியளவில் வட்டார வளர்ச்சி அலுவலர் முன்னிலையில் நடைபெறுவதாக இருந்த இந்த கூட்டத்தில், அக்கிராமத்தில் உள்ள சாக்கடை, குப்பை உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகள் குறித்து மனு அளிக்க கிராம மக்கள் கூடியிருந்தனர்.
ஆனால் வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பல மணி நேரமாகியும் கூட்டத்திற்கு வரவில்லை. அதிகாரிகளுக்காக காத்திருந்த கிராம மக்கள் சிலர் பொழுதை போக்க ஐந்து கல் ஆட்டம் ஆடினர். தொடர்ந்து அதிகாரிகள் வர தாமதம் ஏற்பட்டதால், கிராம மக்கள் அக்கூட்டத்தை புறக்கணித்து சென்றனர். அதிகாரிகளின் இச்செயல் அப்பகுதி மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.