May 15, 2021
தண்டோரா குழு
கோவை அரசு மருத்துவமனையில்,நிரம்பி வழியும் மக்கள் கூட்டத்தை சமாளிக்க, புதிதாக 20 செக்யூரிட்டிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கோவை அரசு மருத்துவமனையில், தினமும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள் மற்றும் வெளி நோயாளிகள், சிகிச்சை பெற்று வருகின்றனர். தவிர, கொரோனா பாதிப்புடன் சுமார், 1000 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏற்கனவே, குறைவான டாக்டர்கள் மற்றும் நர்ஸ்கள் இருப்பதால், சிகிச்சை அளிப்பதில் பெரும் சிக்கல் நிலவி வருகிறது.
மருத்துவமனை வளாகத்தில் தினமும், நோயாளிகள் மற்றும் உறவினர்களின் கூட்டம் நிரம்பி வழிவதால், கூட்டத்தை சமாளிக்க முடியாமல், செக்யூரிட்டிகள் திணறி வந்தனர்.இந்நிலையில், கோவை பில்டர்ஸ் கான்ட்ராக்ட் அசோசியேஷன் (சிபாகா) சார்பில் மருத்துவமனைக்கு, 20 செக்யூரிட்டிகளை வழங்கியுள்ளனர்.
மருத்துவமனை டீன் நிர்மலா கூறுகையில்,
”மருத்துவமனையில் ஆட்கள் பற்றாக்குறை இருந்து வரும் நிலையில், இது போன்ற உதவி, ஊக்கம் அளிக்க கூடியதாக உள்ளது. தற்போது, பணியமர்த்தப்பட்டுள்ள செக்யூரிட்டிகள், மருத்துவமனையில் கூடும் கூட்டத்தை கட்டுப்படுத்துவது, ஆம்புலன்ஸ்களுக்கு வழி ஏற்படுத்தி கொடுப்பது, பொதுமக்களை கண்காணிப்பது உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுவர்,” என்றார்.