April 30, 2021
தண்டோரா குழு
இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை வீச துவங்கியுள்ள நிலையில் கொரொனா தடுப்பூசி போடும் பணிகள் நாடு முழுவதும் தீவிரமடைந்துள்ளது.கோவை அரசு மருத்துவமனையிலும் தடுப்பூசி மையம் செயல்பட்டு வந்த நிலையில் கூட்டத்தை தவிர்க்கும் வண்ணம் தடுப்பூசி மையம் கோவை அரசு கலை அறிவியல் கல்லூரிக்கு மாற்றப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை மையம் செயல்பட்டு வரும் நிலையில் இதர நோயாளிகளும் அங்கு அதிகளவு வந்த வண்ணம் உள்ளதால் மருத்துவமனையில் செயல்பட்டு வந்த தடுப்பூசி மையம் இன்றிலிருந்து கோவை அரசு கலை அறிவியல் கல்லூரியில் செயல்படும் என்றும் இனிவரும் நாட்களில் கல்லூரியிலேயே இந்த தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் கோவை அரசு மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்தப்படாது என்றும் மருத்துவமனை தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் நாளான இன்று இரண்டாம் கட்ட தடுப்பூசிகள் மட்டும் போடப்பட்டன. இதனை பொது மக்கள் ஆர்வமுடன் வந்து செலுத்தி கொண்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பூசி செலுத்தியவர்கள் ஓய்வு எடுப்பதற்கு படுக்கை, தேவைபடுவோருக்கு ஆக்சிஜன் வசதி, வெளியில் அமர்ந்து கொள்ள மேசைகளும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.