April 17, 2021
தண்டோரா குழு
கோவை அரசு மருத்துவமனையில் ஹீமோ பிலியா தினத்தையொட்டி 5 நபர்களுக்கு மாற்றுத்திறனாளி சான்றிதழ் வழங்கப்பட்டது.
ஹீமோ பிலியா எனப்படும் மரபணு குறைபாட்டிற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் ஏப்ரல் 17 ஆம் தேதி ஹீமோபிலியா தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று ஹீமோ பிலியா தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இதில் அரசு மருத்துவமனையில் ஹீமோபிலியா குறைபாட்டிற்காக பதிவு செய்துள்ள 5 பேருக்கு மாற்றுத்திறனாளி சன்றிதழ் வழங்கப்பட்டது.
இது குறித்து அரசு மருத்துவமனை டீன் நிர்மலா கூறியதாவது:
ஹீமோபிலியா மரபணு குறைபாட்டால் உடலில் ரத்தக்கசிவு,ரத்தம் உறையா தன்மை போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது.அவர்களின் குறைபாடுகளுக்கேற்ப சிகிச்சை அளிக்கப்படுகிறது.கோவை,திருப்பூர், ஈரோடு, நீலகிரி, திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த 312 ஹீமோ பிலியாக குறைபாடுகள் உள்ளவர்கள் அரசு மருத்துவமனையில் பதிவு செய்துள்ளனர். இவர்களுக்கு அரசு மருத்துவமனை வளாகத்தில் செயல்படும் ஹீமோபிலியா பகல் நேர மையத்தின் கீழ் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இவர்களையும் மாற்றுத்திறனாளிகளாக கருதி மாற்றுத்திறனாளி சான்றிதழ் வழங்கப்படுகிறது. அரசு மருத்துவமனையில் பதிவு செய்துள்ள 312 பேரில் 130 பேருக்கு மாற்றுத்திறனாளி சான்றிதழ் தயார் நிலையில் உள்ளது.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கொரோனா பாதுகாப்பு காரணமாக 5 பேருக்கு மட்டுமே சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மற்ற அனைவருக்கும் விரைவில் வழங்கப்படும்.
இந்த மாற்றுத்திறனாளி சான்றிதழ் மூலம் மாற்றுத்திறனாளி மாதாந்திர உதவித்தொகை, பேருந்துகளில் கட்டண சலுகை, கல்வி உதவித்தொகை,சுயதொழில் தொடங்குவதற்கு மானியத்துடன் கூடிய கடன் இதுபோன்ற பல்வேறு சலுகைகள் கிடைக்கின்றன.
இவ்வாறு டீன் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் அரசு மருத்துவமனை ஹீமோ பிலியா நோடல் அதிகாரிகள் மருத்துவர்கள் மங்கையர்க்கரசி, கீதாஞ்சலி, கீதா, கோவை ஹீமோபிலியா சொசைட்டி உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பலர் கலந்துகொண்டனர்.