January 29, 2021
தண்டோரா குழு
மத்திய அரசு மருத்துவமனை செவிலியர்களுக்கு இணையான ஊதியத்தை மாநில அரசு மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்களுக்கு வழங்க கோரி கோவை அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஒரு மணி நேர பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை அரசு மருத்துவமனையில் பணிபுரியும் நூற்றுக்கும் மேற்பட்ட செவிலியர்கள் இன்று காலை கருப்பு பேட்ஜ் அணிந்து, ஒரு மணி நேரம் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழ்நாடு அரசு மருத்துவமனை செவிலியர் சங்கம் சார்பில் இந்த போராட்டமானது நடைபெற்றது.
இந்த போராட்டத்தின் போது மத்திய அரசு மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர்களுக்கு இணையான சம்பளத்தை , மாநில அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர்களுக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. கொரொனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களுக்கு அரசு வழங்குவதாக கூறிய ஒரு மாத சிறப்பு ஊதியம் இதுவரை வழங்கப்படவில்லை எனவும், அதை உடனடியாக வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.மேலும் கொரொனா காலத்தில் உயிரிழந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்குவதுடன், அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றும் செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப் படவேண்டும், செவிலியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படவேண்டும், அரசு மருத்துவமனைகளில் போதுமான செவிலியர்கள் பணி நியமனம் செய்யப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் பணிபுறக்கணிப்பு போராட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டது.