May 30, 2018
தண்டோரா குழு
கோவையில் வருமானத்திற்கு அதிகமாக 90 லட்சம் வரையில் சொத்து சேர்த்ததாக கோவை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை அறுவை சிகிச்சை பேராசிரியர் இளங்கோ,மற்றும் அவரது மனைவி பொறியாளர் மல்லிகா ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கோவை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை அறுவை சிகிச்சை துறை பேராசிரியராக பணிபுரிந்து வருபவர் இளங்கோ.இவரது மனைவி மல்லிகா தேசிய நெடுஞ்சாலைத் துறையில் பொறியாளராக பணியாற்றி வருகிறார்.
பேராசிரியர் இளங்கோ கோவை அரசு மருத்துவமனையில் பணிபுரிந்தபடி,குனியமுத்தூர் பகுதியில் மல்லிகா நர்சிங் ஹோம் என்ற பெயரில் மருத்துவமனை ஒன்றும் நடத்தி வருகின்றார்.அரசு ஊழியர்களான இளங்கோ மற்றும் அவரது மனைவி மல்லிகா ஆகிய இருவரும் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து 2013 ம் ஆண்டு வரை வருமானத்திற்கு அதிகமாக 90,51,269 ரூபாய்க்கு சொத்து சேர்த்திருப்பது லஞ்ச ஒழிப்பு துறைக்கு தெரியவந்தது.இதில் வருவாயை விட அதிகமாக இருந்த 90 லட்சத்திற்கும் அதிகமான சொத்துக்களை வாங்கியதற்கான வரவு குறித்த எந்த ஆவணங்களும் இவர்களிடத்தில் இல்லை.
இதனையடுத்து பேராசிரியர் இளங்கோ,அவரது மனைவி மல்லிகா ஆகியோர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.மேலும் இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.