May 19, 2021
தண்டோரா குழு
கோவை அனைத்து ரோட்டரி கிளப்களும் இணைந்து சஞ்சீவனி திட்டத்தை துவங்கியுள்ளது.
கோவை மண்டலத்தில் உள்ள 41 ரோட்டரி கிளப்கள் (ஜி41), கடினமான பிரச்னைகளை தீர்ப்பதில் கடமையுணர்வோடும், தெளிவான தொலைநோக்குடனும் எப்போதும் செயல்பட்டு வருகின்றன. கோவிட் 19 இரண்டாவது அலை, பலரது வாழ்க்கையை அசைத்து பார்த்து, தாங்க முடியா துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த தொற்றின் பாதிப்பையும் தீவிரத்தையும் டாக்டர் பாலா வெங்கட் மூலம், ரோட்டரி மாவட்டம் 3201 ன் கீழ் செயல்பட்டு வரும் 41 ரோட்டரி கிளப்கள் உணர்ந்துள்ளன. அவர் மருத்துவமனைகளின் தேவையை அறிந்து உதவிட, சஞ்சீவனி திட்டத்தை துவக்க ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதையடுத்து, ரோட்டரி மாவட்ட தலைவர் பிபி லட்சுமணன் சஞ்சீவனி திட்டத்தை துவக்கி வைத்தார்.சஞ்சீவனி திட்டம், மூன்று பிரிவுகளில் செயல் படுத்தப்பட்டு வருகின்றது. முதல் பிரிவு, ரோட்டரி கிளப் உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு,ஸ்மார்ட் சிட்டி ரோட்டரி கிளப் தலைவர் ராஜேஷ் நந்தா தலைமையில், தடுப்பூசி திட்டம் நடைபெற்று வருகின்றது.
இரண்டாவது திட்டம், ரோட்டரி அப்டவுன் தலைவர் ஜெயக்கிருஷ்ணன் தலைமையில் பொது மக்களிடையே சமூக ஊடகங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றது. மூன்றாவது பிரிவு, அரசு மருத்துவமனை, இஎஸ்ஐ, ஆரம்ப சுகாதார நிலையங்கள் போன்றவைகளுக்கு தேவையான ஆக்சிஜன் ஜெனரேட்டர் மற்றும் உபகரணங்கள் போன்ற வசதிகளை கோயம்புத்தூர் ரோட்டரி கிளப் தலைவர் டி. மணி தலைமையில் செய்யப்பட்டு வருகின்றது.இவற்றிற்கு மாவட்ட இயக்குனர் டெக்சிட்டி ரோட்டரி கிளப் ஆர்.எஸ் மாருதி ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டுவருகின்றார்.
இது குறித்து டெக்சிட்டி ரோட்டரி கிளப்பின் மாவட்ட இயக்குநர் ஆர்.எஸ்.மாருதி கூறுகையில்,
ரோட்டரி கிளப்பின் பல்வேறு நல் இதயங்கள், சுழற்சங்கத்தினர், அவர்களது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் வழியாக 9 கோடி ரூபாய் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் வாங்கி பொதுமக்களுக்கு உதவ நன்கொடைகள் கிடைத்துள்ளன. பாரடே ஓசோன் புராடக்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி விவேகானந்த், வெளி நாடுகளுக்கான ஏற்றுமதி ஆர்டர்களை தவிர்த்து, ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்க முன்வந்துள்ளது பேருதவியாக அமைந்துள்ளது.
கோவை ரோட்டரி கிளப் 3201 ன் கீழ் உள்ள அனைத்து கோயம்புத்தூர் அனைத்து ரோட்டரி கிளப்களும் கோவை அரசு பொது மருத்துவமனை,இஎஸ்ஐ மருத்துவமனைகளில் தலா 40 படுக்கைகளுக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கி, 5 ஆண்டுகள் பராமரிப்பிற்கும் உத்தரவாதம் அளித்துள்ளனர். ரோட்டரி கிளப் டவுன் டவுன், அரசு பொது மருத்துவமனைக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான கவச உடைகளை வழங்கியுள்ளனர்.
ரோட்டரி கிளப் ஸ்பெக்ட்ரம், பேக்கர்ஸ் அன்ட் ஹக்ஸ் உதவியுடன் 20 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கியுள்ளனர். தமிழ்நாடு மருத்துவு சேவை கழகத்திற்கு தைவான் டிசுசி பவுண்டேசன், கோவை எஸ்ஸ் எம்ம் கார்ப்பரேசனுடன் இணைந்து 400 ஆக்சிஜன் செறிவூட்டிகளை அளித்துள்ளன.
இசட்எப் வின்ட் பவர் கோயம்புத்தூர் பிரைவேட் லிமிடெட், இஎஸ்ஐ மருத்துவமனையில் 80 படுக்கைகளுக்கு 2 ஆக்சிஜன் ஜெனரேட்டர்களை அமைத்து கொடுத்துள்ளது.ரோட்டரி கிளப் சைபர் சிட்டி வி.சுரேந்திரன்,இதனை ஒருங்கிணைப்பு செய்துள்ளார்.
கோவை அரசு மருத்துவமனைக்கு கரூர் வைஸ்யா வங்கியுடன் இணைந்து 20 படுக்கைகளுக்கு 6 ஆக்சிஜன் செறிவூட்டிகளை ரோட்டரி கிளப் கிழக்கு தலைவர் சஞ்சீவ் குமார், சிஐடி 1975 முன்னாள் மாணவர்கள் சங்கம், அவர்களது நண்பர்கள், உறவினர்கள் ஏற்பாடு செய்துள்ளார்.
உடுமலைபேட்டை ஜிஎச்க்கு, நண்பர்கள் மற்றும் சுகுணா புட்ஸ், கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு கிராப்ட்ஸ் மேன், பழனி பொது மருத்துவமனைக்கு, ரோட்டரி கிளப் பழனி, ஆட்டோ டெக்ஸ் கோவை மற்றும் சுகுணா புட்ஸ் ஆகியவை உதவியுள்ளன. அமெரிக்காவை சேர்ந்த டாக்டர் ஆதி நாராயணன் கிருஷ்ணகிரி பொது மருத்துவமனைக்கும், ராசிபுரம் மருத்துவனைக்கு விஷ்வேக் நல அறக்கட்டடளையும் உதவிகளை அளித்துள்ளன. தாரபுரம், வேலூர், பல்லடம், நாமக்கல், பொள்ளாச்சி மருத்துவமனைகளுக்கு ரோட்டரி கிளப் கிழக்கு தேவையான உதவிகளை அளிக்க தயாராகி வருகின்றன.
ரோட்டரி கிளப் சேட்டிலைட் 72 தீவிர சிகிச்சை பிரிவு ஆக்சிஜன் சிலிண்டர்களை அகுவாசப் இன்ஜினியரிங் உடன் இணைந்து வழங்கியுள்ளது.ரோட்டரி கிளப் சாய்சிட்டி,50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஆக்சிஜன் செறிவூட்டிகளை,கோரமண்டல் பெர்ட்டிலைசருடன் இணைந்து, ஊட்டி பொது மருத்துவமனைக்கு வழங்கியுள்ளன.
கோவை அரசு மருத்துவமனைக்கும் 3.5 லட்சம் மதிப்பிலான மருத்துவ உதவிகளை செய்துள்ளது.ரோட்டரி கிளப் டெக்சிட்டி 1 கோடி ரூபாயிலான உயரழுத்த செறிவூட்டிகளை 100 படுக்கை வசதிகள் பயன்பெறும் வகையில் விரைவில் அமைக்கவுள்ளது.ராஜசேகரன் தலைமையிலான ரோட்டரி மிட்டவுன், கோவை அரசு மருத்துவமனைக்கு வழங்க திட்டமிட்டுள்ளார். 30 யூனிட் ஆக்சிஜன் செறிவூட்டிகளை ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு எதிர்கால பயன்பாட்டிற்கு வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு, ஜெனடிக்ஸ் இண்டஸ்ட்ரீஸ், 10 போர்ட்டபிள் உயரழுத்த செறிவூட்டிகளை வழங்கியுள்ளது. 12 தண்ணீர் தூய்மைப்படுத்தும் கருவிகளை வழங்கி, குருதீப் சிங் ஒருங்கிணைப்பு செய்துள்ளார். சஞ்சீவனி திட்டத்தின் கீழ் சக்தி சுகர்ஸ், 20 செறிவூட்டிகளை வழங்கியுள்ளது.
கோயம்புத்தூர் மண்டலத்தில் உள்ள ரோட்டரி கிளப்கள், கோவை அரசு மருத்துவமனைக்கு மொத்தம் 180 படுக்கைகளுக்கும், இஎஸ்ஐ மருத்துவமனைக்கு 260 படுக்கைகளளுக்கும் ஆக்சிஜன் வசதியை ஏற்படுத்தியுள்ளன. பிற மாவட்டங்களுக்கும் உதவியுள்ளன.
ரோட்டரி கிளப் அப்டவுன், டிலைட் மற்றும் கிரீன்சிட்டி ஆகியவை 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள எக்மோ கருவிகளை வழங்கியுள்ளன. தமிழ்நாட்டில் பொது மருத்துவமனையில் நிறுவப்படுவது இதுவே முதல் முறையாகும்.
கோவிட் தடுப்பூசி போட்ட பின்னர் 15 நாட்களுக்கு ரத்த தானம் செய்ய கூடாது என்பதால், ரோட்டரி மெரிடியன் தலைவர் டாக்டர் சதீஷ், சென்னை, கோவை, பெங்களூருவில், தடுப்பூசி போடுவற்கு முன்பான ரத்த தான முகாமை ஏற்பாடு செய்துள்ளார். ரோட்டரி கிளப்களின் உதவி சேவை பற்றி பொதுமக்கள் அறிய, ரோட்டரி வார் ரூம் ஒன்றும், ஜெனித் ரோட்டரி கிளப் சுரேஷ் வழிகாட்டுதலின் பேரில் ஜனனியின் தலைமையில் துவங்கப்பட்டுள்ளது.
இந்த அனைத்து உதவிகளும், நடவடிக்கைகளும் ரோட்டரி மாவட்ட கவர்னர் ஜோஸ் சாக்கோ வழிகாட்டுதல், ஆலோசனைகளின் பேரில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவருக்கு மண்டலத்தில் உள்ள 7 துணை கவர்னர்களும் உதவி வருகின்றனர். ரோட்டரியன் நோக்கம், தனக்கும் மேலானது சேவை என்பதே. இந்த கடுமையான தொற்று நோய் சூழலில் இருந்து விடுபட கடுமையாக பணியாற்றி வருகிறோம் என்றார்.