• Download mobile app
16 Nov 2025, SundayEdition - 3567
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையை சிவன் தான் காப்பாற்றியுள்ளார் – வானதி ஸ்ரீனிவாசன் எம்.எல்.ஏ

October 26, 2022 தண்டோரா குழு

கோவையில் கடந்த 23ஆம் தேதி அதிகாலை கார் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்ட பகுதியில் உள்ள சங்கமேஸ்வரர் கோயிலில் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் பாஜக மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் இன்று வழிபட்டார்.

அவரோடு பாஜக மாநகர தலைவர் பாலாஜி உத்தமர் ராமசாமி மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்து கூட்டு வழிபாடு நடத்தினர்.

பின்பு வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் பேசியதாவது,

‘கோவையை சிவன் தான் காப்பாற்றியுள்ளார். முதலில் உக்கடத்தில் நிகழ்ந்தது சிலிண்டர் விபத்து என தான் அனைவரும் நினைத்தோம். ஆனால் விசாரணையின் போது தான் வெடி பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. இதை ஒரு தனித்த சம்பவமாக பார்க்க முடியாது. இதன் பின்னர் மிகப்பெரிய நெட்வொர்க் இயங்கி வருகிறது. அதனால்தான் இந்த வழக்கை என்ஐஏ விசாரிக்க வேண்டும் என பாஜக கூறி வருகிறது.

ஆனால் இந்த சம்பவத்தை முதல்வர் மு.க ஸ்டாலின் இன்னும் கண்டிக்காதது வருத்தம் அளிக்கிறது. இப்போது மட்டுமில்லை கடந்த மாதம் பாஜகவினர் வீடுகள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட போதும் முதல்வர் கண்டிக்கவில்லை. முதல்வர் மௌனம் காப்பது தீவிரவாத அமைப்புகளை ஆதரிக்கிறாரோ என்கிற சந்தேகம் எழுப்புகிறது. திமுக அமைச்சர்கள் மற்றும் தலைவர்கள் பலருமே சிறுபான்மையினர் வாக்குகளால் தான் தாங்கள் வெற்றி பெற்றதாக பேசுகின்றனர்.

அதனால்தான் முதல்வர் இந்த குற்றங்களை கண்டிக்காமல் இருக்கிறாரோ என தோன்றுகிறது. தீபாவளி உள்ளிட்ட இந்து பண்டிகைகளுக்கு முதல்வர் வாழ்த்து தெரிவிப்பதில்லை. தங்கள் சிறுபான்மையினர் வாக்கு வங்கி பாதிக்கப்பட்டு விடுமோ என அமைதி காக்கின்றனர். சிறு சிறு நிகழ்வுகளுக்கு கூட கருத்து தெரிவிக்கும் களத்திற்கு செல்லும் திமுகவினர் ஒருவர் கூட இங்கு வரவில்லை.

இது உளவுத்துறையின் தோல்வி. முதல்வர் இங்கு வராமல் இந்த சம்பவம் பற்றி வாய் திறக்காமல் இருப்பது கடும் கண்டனத்திற்குரியது.1998 குண்டுவெடிப்பின் போது கூட எங்கள் கட்சியினர் இந்து அமைப்பினர் பலரும் உயிரை தியாகம் செய்துள்ளனர். சிறையில் இருந்து கொண்டு இந்த சம்பவங்களை ஊக்குவிக்கும் நபர்கள் தற்போது செயல்பட்டு வருவது உளவுத்துறைக்கு தெரியுமா என்று விளங்கவில்லை. தமிழக முதல்வர் கௌரவம் பார்க்காமல் இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைக்க வேண்டும்.

கைது செய்யப்பட்டவர்களை என்.ஐ. ஏ அமைப்பு ஏற்கனவே விசாரித்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ளவர்களுக்கு சர்வதேச தொடர்பு இருப்பதால் இந்த வழக்கை என் ஐ ஏ விசாரிப்பது தான் சரி. தமிழக மண்ணில் பயங்கரவாதத்தை ஒழிக்க பாஜக என்ன செய்யும் என்பதை இன்று மாலை தெரிவிக்கிறோம். சிறுபான்மை வாக்குகள் மூலம் தான் ஆட்சியில் இருப்பதாக கூறும் திமுக சிறுபான்மை வாக்குகளுக்காக மற்றவர்களின் உயிர்களை பலி கொடுக்க தயாராக இருக்கிறாரா என்கிற கேள்வி எழுகிறது.

பயங்கரவாத வழக்கில் சிறையில் இருப்பவர்களை விடுவிக்க வேண்டும் என ஆயிரம் பேரை திரட்டி போராட்டம் நடத்துகின்றனர் சட்டமன்றத்தில் பேசுகின்றனர். ஆனால் திருமாவளவன் மற்றும் திமுக கூட்டணி கட்சியினர் இந்த விவகாரத்தில் அமைதியாக இருப்பது ஏன். மாநில முதல்வர் கௌரவம் பார்க்காமல் கோவைக்கு வருகை தர வேண்டும். உளவுத்துறைக்கும் காவல்துறைக்கும் சரியான உத்தரவு வழங்க வேண்டும். மக்களுக்கு நம்பிக்கை அளிக்க வேண்டும்’ என தெரிவித்தார்.

மேலும் படிக்க