June 21, 2018
தண்டோரா குழு
கோவையில்,மருத்துவ கழிவுகளை அப்புறப்படுத்தும் நிறுவனம் மாசுக்கட்டுபாட்டு வாரியத்தால் மூடப்பட்டதால் மருத்துவமனைகளில் உள்ள மருத்துவக் கழிவுகள் முற்றிலும் தேங்கி இருக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கோவையில் அரசு மருத்துவமனை மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன.தினமும் இந்த மருத்துவமனைகளில் சேரும் மருத்துவ கழிவுகளை அகற்றி அழிக்க தனியார் நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.கழிவுகளை பெற்றுக் கொள்ளும் நிறுவனம் அவற்றை தரம் பிரித்து அதற்கான தொழில்நுட்ப முறையில் அழிக்கும் பணியை மேற்கொண்டு வந்தது.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன் விதி மீறல் காரணமாக மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் குறிப்பிட்ட நிறுவனத்தை மூட உத்தரவிட்டனர்.இதனால் கோவை மருத்துவமனைகளில் மருத்துவ கழிவுகள் தேக்கம் அடைந்துள்ளது.ஆற்றை அப்புறப்படுத்த முடியாமல் மருத்துவமனை நிர்வாகிகள் திணறி வருகின்றனர்.இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் மருத்துவமனைகள் புகார் தெரிவித்துள்ளனர்.
போதிய விதிமுறைகளை பின்பற்றினால் மீண்டும் நிறுவனம் இயங்க அனுமதி அளிக்கப்படும் என மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில் அந்த நிறுவனம் மருத்துவக் கழிவுகளை சேலம்,விருதுநகர் ஆகிய இடங்களில் உள்ள மையங்களுக்கு எடுத்து செல்ல நடவடிக்கை எடுக்கத்தபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.