January 12, 2021
தண்டோரா குழு
கோவை மாவட்டத்தில் 95 சதவீதம் பொங்கல் பரிசு விநியோகம் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட வழங்கல் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
தமிழக அரசு அரிசி ரேஷன்கார்டுதாரர்களுக்கு பொங்கலை முன்னிட்டு ரூ.2,500 பணம், முந்திரி, திராட்சை, ஏலாக்காய், கரும்பு, சர்க்கரை, பச்சரிசி உள்ளிட்ட பொங்கல் பரிசு தொகுப்பை அறிவித்தது.மாநிலம் முழுவதும் கடந்த 4-ம் தேதி முதல் பொங்கல் பரிசு ரேஷன்கார்டுதாரர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவை மாவட்டத்தில் இதுவரை 9 லட்சத்து 69 ஆயிரத்து 715 பேருக்கு பொங்கல் பரிசு விநியோகம் செய்யப்பட்டு உள்ளது.
இதுகுறித்து மாவட்ட வழங்கல் துறை அதிகாரிகள் கூறியதாவது:
கோவை மாவட்டத்தில் மொத்தம் 10 லட்சத்து 40 ஆயிரத்து 60 ரேஷன்கார்டு தாரர்கள் உள்ளனர். இதில் 10 லட்சத்து 17 ஆயிரத்து 460 ரேஷன் கார்டுதாரர்கள் பொங்கல் பரிசு பெற தகுதி உள்ளவர்கள். இவர்கள் தவிர கடந்த ஆண்டு ரேஷன்கார்டு கேட்டு 17 ஆயிரம் பேர் புதிதாக விண்ணப்பித்து இருந்தனர். இதில் பலருக்கு ஸ்மார்ட் கார்டு அச்சடிக்குப்பட்டு விநியோகம் செய்யும் பணி நடைபெறுகிறது.
மேலும் சிலருக்கு ரேஷன்கார்டு கிடைக்காமல் உள்ளனர்.இவர்களுக்கு ஆதார் அட்டையை பயன்படுத்தி பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது.
இதன்படி கோவை மாவட்டத்தில் நேற்று வரை 9 லட்சத்து 69 ஆயிரத்து 715 பேருக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டு உள்ளது. இது 95 சதவீதமாகும்.மீதம் உள்ளவர்களுக்கு பொங்கலுக்கு முன்னதாக வழங்கப்பட்டு விடும். யாருக்காவது பொங்கல் பரிசு தொகுப்பு கிடைக்கவில்லை என்றால் அதுகுறித்து புகார் அளிக்கலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.