May 20, 2021
தண்டோரா குழு
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு இருக்கும் பொதுமக்களுக்கு உதவிடும் வகையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.4 ஆயிரம் நிவாரண நிதியாக வழங்கப்படும் என்று அறிவித்து இருந்தார். இதில் முதற்கட்டமாக ரூ.2 ஆயிரம் நிவாரண நிதி வழங்கும் பணி கடந்த 15-ம் தேதி துவங்கி தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.
கோவை மாவட்டத்தில் தற்போது 90 சதவீத பேருக்கு ரூ.2 ஆயிரம் நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட வழங்கல் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கோவை மாவட்டத்தில் மொத்தம் 10 லட்சத்து 25 ஆயிரம் குடும்பஅட்டைகள் உள்ளன. இதில் அன்னயோஜனா திட்டத்தின் கீழ் பயன்பெறும் 52 ஆயிரம் குடும்பஅட்டைகள் உள்பட 9 லட்சத்து 83 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2 ஆயிரம் நிவாரண நிதி பெற தகுதி உடையவர்கள்.இவர்களுக்கு கடந்த 15-ம் தேதி முதல் ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. இதில் 90 சதவீதம் பேருக்கு 90 சதவீதம் நிவாரணம் வழங்கப்பட்டு விட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.