June 2, 2018
தண்டோரா குழு
கோவையில் 42 கட்டுகள் கொண்ட 84 லட்ச ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கோவை கோவில்மேடு பகுதியில் மருதக்கோனார் வீதியைச் சேர்ந்தவர் ஆனந்தன்.இவர் மீது இருசக்கர வாகன திருட்டு சம்பந்தமாக பல வழக்குகள் உள்ளன.
இந்நிலையில் நேற்றிரவு சாய்பாபா காலனியில் இருசக்கர வாகனத்தில் வந்த ஆனந்திடம் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த காவல் துறையினர் விசாரணை நடத்திய போது அவரிடம் இருந்து நான்கு இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்தனர்.அப்போது ஆனந்த் காவல் துறையிடம் தான் தனியார் நிதி நிறுவனத்தில் தற்போது கலெக்ஷன் ஏஜெண்டாக பணிபுரிந்து வருவதாக கூறினார்.
ஆனால் அந்த நோட்டுகள் அனைத்தும் கலர் ஜெராக்ஸ் என்பதை அறிந்த போலிசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில் அவரது நண்பர் சுந்தர் என்பவர் வேலாண்டிபாளையம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து அங்கு இருவரும் சேர்ந்து கடந்த ஒன்றரை மாதமாக 2000 ரூபாய் நோட்டை கலர் ஜெராக்ஸ் எடுத்து புழக்கத்தில் விட்டது தெரிய வந்தது.
இதனையடுத்து காவல் துறையினர் சோதனை நடத்தி அங்கு உள்ள கலர் ஜெராக்ஸ் எடுக்கும் இயந்திரம் மற்றும் 42 கட்டுகள் கொண்ட 84 லட்ச ரூபாய் கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர். தற்போது கள்ள நோட்டு தடுப்பு பிரிவினர் ஆனந்தனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.