March 30, 2020
தண்டோரா குழு
டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில்
கோவையை சார்ந்த 82நபர்கள் கலந்து கொண்டுள்ளனர் என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் இராசாமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கொரோனா வைரஸ் தொற்று கடந்த 3 மாதங்களாகவே, உலக அளவில் மிக வேகமாக பரவி பல்வேறு தாக்கத்தினை ஏற்படுத்தி, பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றது. கொரோனா வைரஸானது மனிதர்களிடமிருந்து மற்றொரு மனிதருக்கு, தும்மல், இருமல் மற்றும் உமிழ்நீரின் மூலம் எளிதில் பரவக்கூடிய நோய்தொற்று என்ற நிலையில் மக்கள் மிகவும் விழிப்பாக இருப்பது அவசியமாகிறது. முதலமைச்சர் கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகளை முழுவீச்சில் மேற்கொள்ள அமைச்சர்கள், அரசுத்துறை உயர் அலுவலர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர்கள் என பல்வேறு கட்ட ஆய்வுக் கூட்டங்களை தினந்தோறும் நடத்தி ஆலோசனைகளை வழங்கி வருகிறார்கள். அதன்படி, கோயம்புத்தூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் எவரும் பாதித்து விடக்கூடாது என்ற நோக்கில், மாவட்ட நிர்வாகம், காவல்துறை, மக்கள்
நல்வாழ்வுத் துறை, வருவாய் துறை, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊரக உள்ளாட்சித்துறை ஆகிய துறைகள் ஒன்றினைந்து தீவிர விழிப்புணர்வு, சுகாதாரப்பணிகள் மற்றும் வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும், அனைத்து தரப்பினரும் சமூக இடைவெளியினை தவறாது கடைபிடித்திட வேண்டும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தொடர்ந்து
அறிவுறுத்தி வருகிறார்கள்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில், கொரோனா தொற்று பறவுதலை தடுத்திட மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்ட விழிப்புணர்வு பணிகள், சுகாதாரப்பணிகள் என பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற போதிலும், கடந்த மார்ச் -21-முதல் 24ஆம் தேதி வரை புதுடில்லி, நிஜாமுதின் பகுதியில் ஒரு அமைப்பினரால் நடத்தப்பட்ட மாநாட்டில், தாய்லாந்து, இந்தோனேசிய மற்றும் மலேசியா ஆகிய நாடுகளிலிருந்து பெருமளவில் கலந்து கொண்டனர். இவர்களில் பலருக்கு கொரோன வைரஸ் பாதிப்பு இருந்துள்ள நிலையில், கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம், ஆனைமலை, பொள்ளாச்சி, கோயம்புத்தூர் மாநகர் பகுதி மற்றும் அன்னூர் பகுதிகளைச் சார்ந்த 82நபர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில் இம்மாநாட்டில் கலந்து கொண்டோர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில்,
பெரும்பாலானோர்களுக்கு கொரோனா வைரஸ் அறிகுறிகள் இருப்பதாக முதற்கட்ட
ஆய்வில் தெரிய வருகின்றது.
இந்நிலையில், அறிகுறிகள் இருப்பதாக கண்டறியப்பட்ட வீடுகள் மற்றும் அந்தந்த
தெருக்களில் வசிப்போர், அவர்களுடன் நெருங்கிய தொடர்பிலிருந்தோர் என
அனைவரையும் வீட்டிலேயே இருந்து தனிமைப்படுத்திக்கொள்ள
அறிவுறுத்தப்பட்டுள்ளது, மேலும், மேற்கூறிய நபர்கள் வசிக்கும் பகுதிகள் முழுமைக்கும்
கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு முழுசுகாதாரப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு
வருகின்றது. இதன் நோக்கம், மேலும் பலருக்கு தொற்று ஏற்படக்கூடாது என்பதாகும். பொதுமக்கள் அனைவரும் இதன் ஆபத்தினை அவசியம் புரிந்து கொள்வதுடன்
யாருக்கேனும் சளி, இருமல், மூச்சுத் தினறல், தொண்டை வலி போன்ற அறிகுறிகள் இருப்பின் உடனடியாக அரசு மருத்துவமனைகளை நாடி தவறாது சோதித்துக் கொள்ள
வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொள்ளப்படுகின்றது. அப்போது தான்,அவர்களுக்கு மட்டுமல்லாது அவரால் பிறருக்கு எந்த பாதிப்பு வறாமல் பார்த்துக் கொள்ள முடியும். எனவே, உலகளவில் வேகமாக பரவி நாடுமுழுவதும் பெரும் அச்சத்தினை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று குறித்து பொதுமக்கள் அலட்சியம் காட்டாமால் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வுடன், அரசின் அறிவுரைகளை தவறாமல் பின்பற்றிட வேண்டும், அப்போதுதான் கொரோனா வைரஸ் பாதிப்பினை முழு அளவில் தடுக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்