May 14, 2021
தண்டோரா குழு
கோவையில் அரசு மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்கள் நிரம்பி வரும் நிலையில் அறிகுறி இன்றி தொற்று உறுதி செய்யப்பட்ட 7261 பேர் வீடுகளில் தனிமைப்ப டுத்தப்பட்டனர்.
கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று 1 லட்சத்தை கடந்து விட்டது. இதில் 90 ஆயிரம் பேர் வரை குணமடைந்து விட்டனர். இருப்பினும் கோவையில் தினசரி பாதிப்பு 2,600 ஐ கடந்து விட்டது. இன்னும் சில நாட்களில் ஒருநாளைக்கு 3 ஆயிரம் பேருக்கு மேல் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது.
தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு அரசு மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுதவிர மாவட்டத்தில் உள்ள 50க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. கோவை மட்டுமின்றி வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்களும் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுபோன்ற காரணங்களால் கோவையில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு காலி படுக்கைகள் கிடைப்பது கடினமாக உள்ளது. இந்நிலையில் அறிகுறி இன்றி தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள்,வீடுகளில் தனிமைப்படுத்தி கொள்ள சுகாதார துறையினர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் அனுமதி வழங்கி வருகின்றனர்.தற்போது வரை 7261 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.