July 11, 2018
தண்டோரா குழு
கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர் மழை காரணமாக 700 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் சூழலில் கோவையில் பல்வேறு பகுதிகளில் இரவில் இருந்து தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
கேரளா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழையின் காரணமாக தொடர்ந்து மழை பெய்து வரும் சூழலில்,கேரளாவை ஒட்டியுள்ள கோவை மாவட்டத்தில் அவ்வப்பொழுது விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.கோவையில் காந்திபுரம்,அவினாசி சாலை,திருச்சி சாலை,ஆர்.எஸ். புரம் உள்ளிட்ட பல்வேறு மாநகரப் பகுதிகளிலும்,புறநகர் பகுதிகளிலும் இரவு முதலே தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
கோவை மாவட்டத்தில் அதிகபட்சமாக சின்கோனா பகுதியில் 170 மில்லி மீட்டர்கள் மழையும், குறைந்தபட்சமாக பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் 4 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
மழை பெய்து வருவதன் காரணமாக கோவை மாவட்டம் முழுவதும் இதமான சூழல் நிலவி வருகிறது.
மழையால் காலையில் அலுவலகங்கள்,பள்ளிக்கு செல்பவர்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.மேலும் பல்வேறு பகுதிகளில் பனி மூட்டமாக காணப்படுகிறது.இதனால் வாகனங்களை ஒட்டுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.நொய்யல் ஆற்றிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.தொடர் மழையின் காரணமாக கோவை குற்றாலம் அருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.இதனால் மறு அறிவிப்பு வரும் வரை சுற்றுலா பணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.