December 23, 2021
தண்டோரா குழு
கோவை மாவட்டத்தில் 16 அரசு மருத்துவமனைகள் உள்பட 67 மருத்துவமனைகளில் இன்னுயிர் காப்போம் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வாகன விபத்துகளில் சிக்குபவர்களுக்கு முதல் 48 மணி நேரத்திற்கு அரசு, தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சையளிக்கும் இன்னுயிர் காப்போம் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்மையில் சென்னையில் தொடங்கி வைத்தார்.இத்திட்டம் தமிழகத்தில் 600க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் செயல்படுத்தப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் 16 அரசு மருத்துவமனைகள், 51 தனியார் மருத்துவமனைகள் என 67 மருத்துவமனைகளில் செயல்படுத்தப்பட்டுள்ளது.கடந்த இரண்டு நாள்களுக்கு முன் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ் கோவை மாவட்டத்தில் 15 பேர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.அரசு மருத்துவமனைகளில் 9 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 6 பேரும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
தமிழக எல்லைக்குள் விபத்துக்குள்ளாகும் அனைவருக்கும் இத்திட்டத்தில் சிகிச்சை அளிக்கப்படும் என்று சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.