January 9, 2021
தண்டோரா குழு
சட்ட மன்ற தேர்தலையொட்டி கோவையில் 4,500 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு வருவதாக ஆட்சியர் ராஜாமணி தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து ஆட்சியர் ராஜாமணி கூறியதாவது:
இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிக்காட்டுதலின்படி அந்தந்த மாவட்டத்திற்குள் உள்ள மத்திய மாநில அரசு, உள்ளாட்சி துறையின சார்ந்த பணியாளர்களை தேர்தல் பணிக்காக பணி அமர்த்தப்பட வேண்டும். அதற்காக மத்திய மாநில அரசுப் பணியாளர்கள், அரசின் கட்டுப்பாட்டில் உள்ள உள்ளாட்சி துறைகளில் பணிபுரிபவர்களின் விவரங்களை முன்கூட்டியே பெற்று தகுதியான பணியாளர்களை தேர்தல் பணியில் பணியமர்த்திட அனைத்து நிலை அலுவலர்களின், அந்தந்த துறை தலைவர்கள் மூலமாக கலெக்டருக்கு அனுப்பி வைத்திட வேண்டும்.
இதில் மத்திய அரசில் பணிபுரியும் சில பணியாளர்கள், நுண்பார்வையாளர்களாக (மைக்ரோ அப்சர்வர்) பணியமர்த்தப்படுவர். தற்போது வரை 10,764 மத்திய, மாநில அரசு மற்றும் உள்ளாட்சி துறை பணியாளர்கள் விவரங்கள் பெறப்பட்டுள்ளன.கோவை மாவட்டத்தில் தற்போது 3,048 மொத்த வாக்குச் சாவடி மையங்கள் உள்ளன. ஆனால் கொரோனா அச்சம் காரணமாக கூடுதல் வாக்குச்சாவடி மையங்கள் உருவாக்கப்பட உள்ளன. எனவே புதியதாக உருவாக்கப்படவுள்ள உத்தேச வாக்குச் நிலையங்களையும் சேர்த்து மொத்தம் 4,500 வாக்குச் சாவடி மையங்கள் வருகிற சட்ட மன்ற தேர்தலில் அமைக்கப்பட உள்ளன. எனவே மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், அரசுதுறை சார்ந்த அலுவலர்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைகழகங்களில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் விபரங்கள் எவ்வித விடுபாடுகளின்றி மேற்படி துறைகள், நிறுவனங்கள் தலைவர்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.