June 21, 2021
தண்டோரா குழு
கோவையில் 439 அர்ச்சகர்கள், 206 ஏழை பெண்களுக்கு திருமணத்திற்கு தாலிக்கு தங்கம் மற்றும் நிவாரணத்தை உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி வழங்கினார்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலைத்துறை சார்பில் மாத சம்பளம் இன்றி பணியாற்றும் அர்ச்சகர்கள் மற்றும் பூசாரிகள் 439 பேர்களுக்கு 4 ஆயிரம் உதவித்தொகையும், 10 கிலோ அரிசி உள்ளிட்ட 15 வகையான மளிகை நிவாரண பொருட்களும், சமூக நலத்துறையின் சார்பில் படித்த ஏழை பெண்களின் திருமணத்திற்கு தாலிக்கு 8 கிராம் தங்கம் மற்றும் தலா 25 ஆயிரம் ரூபாய்கான காசோலை 206 பெண்களுக்கும், தமிழக உணவு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி வழங்கினார்.
முன்னதாக அவர் நிகழ்ச்சியில் பேசும்போது,
தமிழக முதல்வர் முதல் தவணையாக மே 10 ந்தேதியும், கலைஞர் பிறந்தநாள் அன்று 2 ம் தவணையாக நிவாரணங்களை வழங்குவது துவக்கி வைத்தார். அதிலிருந்து பொதுமக்களுக்கு நியாய விலைக்கடைகளில் நிவாரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றது. கோவையில், 353 கோவில்கள் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ளது, இதில், 439 பேர் பணியாற்றி வருகின்றனர்.கொரோனா காலத்தில் யாரும் பாதிக்ககூடாது எனவும், அதேசமயத்தில், இலங்கை அகதிகளுக்கும் நிவாரணங்களை முதல்வர் அவர்கள் வழங்கியுள்ளார்.
மேலும், மருத்துவர்கள், செவிலியர்கள், பத்திரிக்கையாளர்கள், காவல்துறையினர் அனைவரையும் முன்கள பணியாளர்களாக அறிவித்து நிவாரணங்களை முதல்வர் வழங்கி வருகின்றார். கோவைக்கு இரு முறை வந்து கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு மேற்கொண்ட முதல்வர் அவர்கள், பிபி கிட் அணிந்து, கொரோனா நோயாளிகளையும் சந்தித்து பேசினார். பெரும் தொற்றை கட்டுப்படுத்த சிறப்பு அதிகாரிகளை நியமித்து நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளார் என கூறியவர், பொதுமக்கள் மற்றும் முன்கள பணியாளர்கள் அசாதாரணமாக இருக்க கூடாது, முக கவசங்கள் கட்டாயம் அணிய வேண்டும். கிருமிநாசினி பயன்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
இந்த நிகழ்ச்சியின்போது, மாவட்ட ஆட்சியர் சமீரான், மாவட்ட வருவாய் அலுவலர் இராமதுறை, திமுக மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக், புறநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.