July 3, 2021
தண்டோரா குழு
கோவையில் வீட்டு கம்பவுண்டுக்குள் இருந்த கழிவறையை பயன்படுத்த வந்தபோது குரங்கால் தாக்கப்பட்ட 4வயது குழந்தை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
கோவை ஹோப்ஸ் – விளாங்குறிச்சி சாலையில் கௌதமபுர நகரில் வசித்து வருபவர் ராஜீவ் காந்தி. ஆட்டோ ஓட்டுனரான இவரது 4 வயது மகள் கடந்த 30 ஆம் தேதி வீட்டு காம்பவுண்டுக்குள் இருந்த கழிவறையை பயன்படுத்த வந்தபோது வீட்டிற்குள் வந்த குரங்கு ஒன்று குழந்தையை தாக்கியுள்ளது.
இதைகண்ட,குழந்தையின் தாய் சத்தம் போடவே,அருகிலிருப்பவர்கள் வந்துள்ளனர். மேலும், அவர் குரங்கை விரட்டி அடித்துவிட்டு குழந்தையை பார்த்தபோது, குழந்தைக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, குழந்தை தனியார் மருத்துவமனையில் அழைத்து செல்லப்பட்டு முதற் உதவி அளிக்கப்பட்டது.
ஆனால், குரங்கு கடி அல்லது தாக்குதலுக்கு கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தான் மருந்து உள்ளதால், மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் இருந்து குழந்தை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு குழந்தைக்கு குரங்கு கடிக்கு கொடுக்ககூடிய ஊசி போடப்பட்டு, தொடர் சிகிச்சையில் உள்ளார்.
குழந்தைகள் பிரிவில் அனுமதிக்கபட்டுள்ள குழந்தை நல்ல முறையில் இருப்பதாகவும், ஓரிரு தினங்களில் குணமடைந்து வீடு திரும்புவார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே கடந்தாண்டு சாய்பாபா காலனி பகுதியில் வீட்டிற்குள் குரங்கு நுழைந்ததை அடுத்து வனத்துறை சார்பில் கூண்டு வைக்கப்பட்ட நிலையில், மீண்டும் மாநகர முக்கிய பகுதியில் குடியிருப்பில் குரங்கு நுழைந்து குழந்தையை தாக்கியுள்ள சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.
இதுதொடர்பாக வனத்துறை விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளது.