March 1, 2018
தண்டோரா குழு
தமிழகம் முழுக்க, பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று துவங்கி ஏப்., 6 வரை நடக்கிறது.கோவை கல்வி மாவட்டத்தில், 86 மையங்களில் நடக்கும் இத்தேர்வை,30 ஆயிரத்து 28 பள்ளி மாணவர்கள் எழுதுகின்றனர்.இதுதவிர, ஏழு மையங்களில், 1,729 தனித்தேர்வர்களும் எழுதுகின்றனர்.பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், 27 மையங்களில், 6 ஆயிரத்து 805 மாணவர்களோடு, ஒரு மையத்தில், 341 தனித்தேர்வர்கள் பொதுத்தேர்வு எழுதவுள்ளனர்.
இவர்களுக்கான வினாத்தாள்கள் அனைத்தும், 12 தேர்வு ஒருங்கிணைப்பு மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. இங்கிருந்து, 23 வழித்தடங்களில்,காலை 6:00 மணி முதல், தேர்வு மையங்களுக்கு, வினாத்தாள்கள் கொண்டு செல்லப்பட்டன.20 மாணவர்களுக்கு ஒரு அறை வீதம் ஒதுக்கப்பட்டுள்ளதால், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அறை கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேர்வு மையங்களாக செயல்படும் பள்ளிகளில், அடிப்படை வசதிகள் முழுமையாக ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.அனைத்து நோடல் மையங்களிலும், தேர்வர்களுக்கான விதிமுறைகள், விதிகளை மீறினால் அளிக்கப்படும் தண்டனைகள் குறித்து, தகவல் பலகையில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.
தேர்வு சார்ந்த, அனைத்து விதமான புகார்களையும், அறை கண்காணிப்பாளர், நோடல் மைய ஒருங்கிணைப்பு அலுவலர்களிடம், மாணவர்கள் தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது உள்ளது.மேலும் பொதுத்தேர்வு குறித்த புகார்களை, 0422-239 1062 என்ற தொலைபேசி எண்ணிலும் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.