May 18, 2018
தண்டோரா குழு
தமிழகத்தில் கீழடி, கொற்கை,ஆதிச்சநல்லூர் ஆகிய 3 இடங்களில் அகழ்வு வைப்பகம் இந்த ஆண்டு உருவாக்கப்பட இருப்பதாகவும்,கீழடியில் அகழ்வு வைப்பகம் உருவாக்க ஒரு கோடி ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகள் விரைவில் துவங்கப்படும் என தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
கீழடி அகழ்வாரய்ச்சியில் எதிர்பார்த்தை விட ஏராளமான பொருட்கள் கிடைத்து வருகின்றதாகவும், அவை தமிழனின் தொன்மையை நிலை நிறுத்தும் வகையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.கடந்த 18 நாட்கள் ஆய்வில் 2200 பொருட்கள் கிடைத்துள்ளதாகவும்,தொடர்ந்து 6 மாதம் 109 ஏக்கர் பரப்பளவில் ஆய்வுகள் நடக்க இருப்பதாக கூறியவர்,கீழடியில் நடைபெறும் இந்த ஆய்வுகளில் தமிழனின் தொன்மையான பல சான்றுகள் கிடைத்து வருவதாகவும்,கீழடியில் தற்பொது 4 வது கட்ட ஆய்வு நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
இதுவரை நடைபெற்ற ஆய்வுகளில் கிடைத்த 7700 பொருட்களில் பாதி பொருட்கள் மைசூரில் உள்ள மத்திய அரசின் அகழ்வாரய்ச்சி மையத்தில் இருப்பதாகவும்,மற்றவை தமிழகத்தில் இருப்பதாகவும் தெரிவித்தவர்,இந்த பொருட்களை கொண்டு அகழ்வு வைப்பகம் உருவாக்கப்பட இருப்பதாகவும் தெரிவித்தார்.