April 16, 2020
தண்டோரா குழு
கொரோனா சிகிச்சைக்கு முக்கிய தேவையான வென்டிலேட்டர்கள் பற்றாக்குறையை தவிர்க்கும் விதமாக கோவையில் வேகமாக வென்டிலேட்டர்கள் தயாராகி வருகிறது.
தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் இந்த சிகிச்சைக்கு வென்டிலேட்டர்கள் அதிக அளவில் தேவைப்படுகின்றன. மூச்சுத்திணறல் ஏற்படும் நோயாளிகளுக்கு செயற்கை சுவாசம் அளிக்க பயன்படும் இந்த வென்டிலேட்டர் பயன்பாடு உலக அளவில் அதிகரித்துள்ள நிலையில் இதற்கான தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கோவை சின்னவேடம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஹைடெக் இன்ஜினியரிங் எனும் சி.என்.சி மெசினரிஷ் சார்ந்த தயாரிப்பில் ஈடுபட்டு வரும் சுரேஷ் என்பவர் மக்களுக்கு சேவை செய்யும் பொருட்டு குறைந்த விலையில் வெண்டிலேட்டர் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளார்.அதிக விலைக்கு விற்பனையாகும் இந்த வென்டிலேட்டர் கருவியை தற்போது குறைந்த விலையில் விற்பனை செய்யும் விதமாக தயாரித்துள்ளார்.
இது குறித்து சுரேஷ் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
மக்களுக்கு உதவும் வகையில் லாப நோக்கு இல்லாமல் இந்த வென்டிலேட்டர் தயாரிப்பு முயற்சியில் இறங்கி உள்ளதாகவும், இதற்கு தமிழக அரசு அனுமதி கொடுத்து தங்களது சேவையை மக்களுக்கு கொண்டு சேர்க்க உதவ வேண்டுமென்றும் கேட்டு கொண்ட அவர்,மின் இணைப்பு துண்டிக்கப்பட்டாலும் பேட்டரி மூலம் இயங்கும் வகையிலும் இந்த வென்டிலேட்டர்ரை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார்.