March 30, 2020
தண்டோரா குழு
கோவை மாவட்டத்தில் உள்ள வெளிமாநிலத்தை சேர்ந்த 16000 பேருக்கு தினசரி உணவு வழங்கப்பட்டு வருகிறது என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார்.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி,மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பெரியய்யா, கோவை மாநகர காவல் ஆணையர் சுமித்சரண் மற்றும் காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் உள்ளிட்டோருடன் ஆலோசணை நடத்தினார்.
இந்த ஆலோசணையில் கொரோனா பரவுவதை தடுப்பது குறித்தும் சமூக விலகலை கடைபிடிப்பது மற்றும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டிருக்கும் சூழலில் பொதுமக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவது குறித்தும் அதிகாரிகளுக்கு அமைச்சர் பல்வேறு ஆலோசணைகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் வேலுமணி,
தமிழகத்தில் கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு
வருகிறது. கோவை ஈ எஸ்.ஐ மருத்துவமனையில் 500 மருத்துவர்கள் 500 செவிலியர் 150 தூய்மை பணியாளர்கள் 24 மணி நேரம் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர். தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தனிப்பிரிவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.கோவையில் கொரோனா சந்தேகத்தின் பேரில் இதுவரை 221 பேருக்கு சோதனை செய்ததில் 186 பேருக்கு இல்லை என தெரியவந்துள்ளது. 6 பேருக்கு மட்டுமே உறுதி செய்யப்பட்டுள்ளது.
வெளிநாடுகளிலிருந்து வந்த 4450 பேர் தனிமை படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில் உள்ள வெளிமாநிலத்தை செர்ந்த 16000 பேருக்கு தினசரி உணவு வழங்கப்பட்டு வருகிறது. மாநகராட்சி சார்பில் விடை பம்பு,கை பம்பு மற்றும் லாரிகள் மூலம் கிருமி நாசினி மருந்துகள் தெளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் கொரோனா நோய் தொடர்பாக
சமூக ஊடகங்கள் மூலம் யாரேனும் வதந்திகள் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கோவை மாவட்டத்தில் பேருந்து நிலையங்களில் மார்க்கெட் அமைத்துள்ள நிலையில் அதனை கூடுதல் படுத்த சொல்லியுள்ளதாகவும் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 100 வாகனங்கள் மூலம் ஒவ்வொரு வார்டுக்கும் சென்று விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.தஞ்சையில் உள்ளாட்சி மூலம் வரி வசூல் செய்வதாக சிலர் கூறியுள்ளார்கள் எனவும் ஜூன் மாதம் வரை வரி வசூலிக்க யாரும் அறிவுறுத்த மாட்டார்கள் என உறுதியளித்த அமைச்சர்,உள்ளாட்சி துறை மூலம் மாநிலம் முழுவதும் 2.5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பணியில் உள்ளார்கள். கொரோனா நோய் தடுப்பில் மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகம் சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது எனவும் குறிப்பிட்டார்.
இதேபோல் கோவையிலுள்ள ஜார்கண்ட் மாணவர்களுக்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் இதேபோல் கோவையில் வெளிமாநிலத்தவர் யார் இருந்தாலும் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டால் தேவைகள் நிறைவேற்றித்தரப்படும் எனவும் ஜார்கண்ட் மாணவர்கள் கோவையிலுள்ள 7 விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் எனவும் கூறினார்.ஆனைமலை மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களை கண்டறிய குழு அமைக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டார்.கொரோனா நோய் பரவலை தடுக்க நிலவேம்பு கசாயம் பருகுவதை தவிர்க்க முடியாது எனவும் நிலவேம்பு கசாயம் பருகுவது தொடர்பாக அரசு பரிசீலனையில் உள்ளது எனவும் தெரிவித்தார்.