June 13, 2018
தண்டோரா குழு
வீட்டுமனை பட்டா வழங்கப்படவில்லை என்று கூறி கோவை கிருஷ்ணராயபுரம் பகுதியைச் சேர்ந்த சுமார் 200க்கு மேற்பட்ட பொதுமக்கள் கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோவை புலியகுளம் பகுதியில் அமைந்துள்ள கிருஷ்ணராயபுரம் கிராமத்தில் சுமார் 150 குடும்பங்களுக்கு வீட்டுமனை அரசு வழங்கி உள்ளது.ஆனால் 45 வருடங்கள் ஆகியும் இதுவரை எங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்படவில்லை என்று கூறி கிருஷ்ணராயபுரம் பகுதியைச் சேர்ந்த சுமார் 200க்கு மேற்பட்ட பொதுமக்கள் வீடற்ற தாழ்த்தப்பட்டோர் சங்கத்தின் தலைவர் வெங்கடாசலம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதுகுறித்து தாழ்த்தப்பட்டோர் சங்கத்தின் தலைவர் வெங்கடாசலம் கூறும்போது,
“கிருஷ்ணராயபுரம் பகுதியில் 45 வருடங்களுக்கு முன்பு 150 குடும்பங்களுக்கு அரசு வீடு கட்டிக்கொள்ள வீட்டுமனை வழங்கி உள்ளது.ஆனால்,இதுவரை எங்களுக்கு அந்த இடத்தை தரவில்லை.இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியர்கள் பரிந்துரை செய்தும்,கிராம நிர்வாக அதிகாரி பரிந்துரை செய்தும் இதுவரை எங்களுக்கு அதிகாரிகள் இடங்களை வழங்கவில்லை.இதனால் நாங்கள் எங்கள் சங்கத்தின் மூலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து,அந்த வழக்கில் எங்களுக்கு அரசு உத்தரவிட்டபடி நிலங்களை உடனே வழங்க வேண்டும் என்று எங்களுக்கு சாதகமாக தீர்ப்பளித்துள்ளது.
சுமார் 5 ஏக்கர் பரப்பளவு உள்ள நிலத்தை தனியார் நிறுவனங்கள் ஆக்கிரமித்து வீடுகள் கட்டி அதை வாடகைக்கு விட்டுள்ளனர். குறிப்பாக மிகப் பெரிய நிறுவனங்கள் சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்து அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி வாடகைக்கு விட்டுள்ளனர்.
நாங்கள் கடந்த 15 வருடங்களாக போராட்டம் நடத்தியும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது வருத்தமளிக்கிறது.மேலும்,நாங்கள் தமிழக முதல்வரை நேரடியாக சந்திக்க அனுமதி கேட்டுள்ளோம் தமிழக முதல்வரை சந்தித்து எங்கள் கோரிக்கையை நிறைவேற்றும்படி விண்ணப்பிக்க உள்ளோம்”. என்று கூறினார்.