May 28, 2021
தண்டோரா குழு
கோவை மாவட்டத்தில் அறிகுறி இன்றி தொற்று உறுதி செய்யப்படுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக வீடுகளில் தனிமைப்படுத்தப்படுவோரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. தற்போது 23 ஆயிரம் 845 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர்.
கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று 1.50 லட்சத்தை கடந்து விட்டது. இதில் 1 லட்சம் பேர் வரை குணமடைந்து விட்டனர். இருப்பினும் கோவையில் தினசரி பாதிப்பு 4000 கடந்து செல்கிறது.கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு அரசு மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுதவிர மாவட்டத்தில் உள்ள 50க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவ மனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. கோவை மட்டுமின்றி வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்களும் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுபோன்ற காரணங்களால் கோவையில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு காலி படுக்கைகள் கிடைப்பது கடினமாக உள்ளது. இந்நிலையில் அறிகுறி இன்றி தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள், வீடுகளில் தனிமைப்படுத்தி கொள்ள சுகாதார துறையினர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் அனுமதி வழங்கி வருகின்றனர்.
இதுகுறித்து மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் கூறுகையில்,
“கோவை மாவட்டத்தில் கடந்த வாரம் 13ஆயிரம் பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டனர். இந்நிலையில் தற்போது அறிகுறி இன்றி தொற்று உறுதி செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இதனால் வீடுகளில் தனிமைப்படுத்தப் படுபவர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்து 845 ஆக உள்ளது,” என்றார்.