November 26, 2021
தண்டோரா குழு
கடந்த பல நாட்களாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்துவருவதால் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி விவசாயிகள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளார்கள்.
இந்த நிலையில் கோவை சாய்பாபா காலணி காய்கறி சந்தைக்கு தக்காளி வரத்து மிகவும் குறைந்துள்ளதால் தக்காளியின் விலை கிடு,கிடுவென உயர்ந்து வின்னை முட்டும் அளவிற்கு வந்துள்ளதால், வியாபாரிகளும், பொதுமக்களும் கலக்கமடைந்துள்ளனர்.
மேலும் தொடர்மழை,வெள்ள பாதிப்புகள் என்று ஒருபுறம் இருந்தாலும்,தக்காளி உற்பத்தியில் தமிழகத்தில் கோவை மாவட்டமும் ஒன்று. கோவை மதுக்கரை,எட்டிமடை, பாலத்துறை, வழுக்குபாறை,மற்றும் அன்னூர், சூலூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் பெருமளவில் தக்காளி பயிரிட்டு சாகுபடி செய்கிறார்கள். இருப்பினும் கோவையில் தக்காளி விலையேற்றம் என்பது பலரையும் ஆச்சரியபட வைக்கிறது.
இதுகுறித்து தக்காளி வியாபாரி காதர் கூறும்போது,
தக்காளி உள்ளிட்ட அத்தியாவசிய காய்கறிகளின் விலை உயர்விற்கு மழை மட்டும் காரணமல்ல பெட்ரோல், டீசல் விலை உயர்வும் முக்கிய காரணமாக உள்ளது. மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான காலால் வரியை குறைத்ததை அடுத்து இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்கள் பெட்ரோல்,டீசல் மீதான கலால் வரியை குறைத்துள்ளதால் அந்த மாவட்டங்களில் அத்தியாவசிய பொருட்களின் விலை கட்டுக்குள் வந்துள்ளது.
தமிழக அரசும் அதுபோல் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்து விலைவாசியை கட்டுக்குள் கொண்டுவரவேண்டும். என்பதே பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளின் கோரிக்கையாக உள்ளது.