• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் வரும் ஆகஸ்ட் 19,20ஆம் தேதிகளில் ஸ்டார்ட் அப் திருவிழா-மாவட்ட ஆட்சியர் பேட்டி.

August 17, 2023 தண்டோரா குழு

ஸ்டார்ட் அப் தமிழ்நாடு நிகழ்ச்சி குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,

தமிழகத்தின் புதுத் தொழில் சூழலை வலுப்படுத்தவும், புதுயுகத் தொழில் முனைவில் உலகளாவிய அளவில் தமிழ்நாட்டினை முதன்மை மாநிலமாக உருவாக்கும் நோக்கத்துடனும் இயங்கி வரும் தமிழ்நாடு அரசின் புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கமானது, கோயமுத்தூர் கொடிசியா வளாகத்தில் ஆகஸ்ட் 19, 20 ஆகிய இருநாட்கள் தமிழ்நாடு ஸ்டார்ட் அப் திருவிழா நிகழ்வினை நடத்துகின்றது.

இதில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாகவும் வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி,குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தொழில், முதலீடு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் முனைவர் T.R.B.ராஜா, அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளதாக ஆட்சியர் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டார்ட் தமிழ்நாடு இயக்குனர் சிவராஜா ராமநாதன் கூறுகையில்,

புத்தொழில் நிறுவனங்களுக்காக தமிழக அரசு நடத்துகின்ற இந்த மாபெரும் விழாவில் 450 க்கும் மேற்பட்ட அரங்குகள் கொண்ட கண்காட்சி அமைக்கப்பட உள்ளது. 50க்கும் மேற்பட்ட ஆளுமைகளின் உரைகள் மற்றும் கலந்துரையாடல்களுடன் கூடிய கருத்தரங்கம் நடைபெற உள்ளது. மேலும், முதலீட்டாளர் சந்திப்பு நிகழ்வுகள், புத்தொழில் நிறுவனங்கள் தங்களது புதுமையான தயாரிப்புகளை அறிமுகப்படுத்துதல், தொழில்முனைவோர்கள் தங்களது பயணத்தை பகிர்ந்து கொள்ளுதல் என பல்வேறு வகையான நிகழ்வுகள் நடைபெற உள்ளன.

இந்நிகழ்வில், தொழில்முனைவோர்கள் – முதலீட்டாளர்கள், தொழில் முனைவு வல்லுநர்கள் மற்றும் வழிகாட்டுநர்கள் ஆகியோரோடு கலந்துரையாடவும் அரங்குகள் அமைக்கப்பட உள்ளது.மேலும், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் அரங்கில், அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து தொழில்முனைவோர்கள் தெரிந்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மாபெரும் தொழில் கனவு என்னும் கருத்துருவோடு தமிழ்நாடு அரசால், முதல்முறையாக புத்தொழில் நிறுவனங்களுக்கென பெரிய அளவில் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த நிகழ்வானது இளைய தலைமுறையினர் இடையே தொழில்முனைவு சார்ந்த நேர்மறையான சிந்தனையை ஏற்படுத்தவும், சமூகத்தில் தொழில் முனைவு குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தவும் உதவும் என தெரிவித்தார்.

மேலும் படிக்க