July 9, 2018
தண்டோரா குழு
கோவை தமாஸ் வீதியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் சுமார் ரூ8.5 லட்சம் மதிப்பிலான 750 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கோவை டவுன்ஹால் தாமஸ் வீதியில் ஒரு வீட்டில் மூட்டை மூட்டையாக பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் விஜயா லலிதாம்பிகா தலைமையிலான குழுவினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
வீட்டை குடோனாக மாற்றி செயல்பட்ட வந்த அந்த கட்டிடத்தின் அறைகளில் சுமார் ரூ.8.5 லட்சம் மதிப்பிலான 20 மூட்டைகளிலான ஹான்ஸ்,பான் பாக்கு,குட்கா உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.கட்டிட உரிமையாளர் மெக்ராஜ் என்பவரை பிடித்து உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும்,வாசனை வராதவாறு ஊதுபர்த்தியுடன் குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது.கோவை சூலூர் பகுதியில் குட்கா ஆலை கண்டுபிடிக்கப்பட்டதற்குப் பிறகு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அனைத்து பகுதிகளிலும் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.கடந்த வாரம் இதே தாமஸ் வீதி,ராஜவீதி,தர்மராஜா கோயில் வீதி மற்றும் காந்திபார்க் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை நடத்திய உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சுமார் 2ஆயிரம் கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.