January 23, 2020
தண்டோரா குழு
பெரியாரை இழிவுப்படுத்தும் வகையில் பேசிய நடிகர் ரஜினிகாந்த்தினை கண்டித்து, கோவையில் ரஜினியின் உருவ படத்தை கிழித்து போராட்டம் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டனர்.
சென்னையில் நடைபெற்ற துக்ளக் விழாவில் 1971 ம் ஆண்டு சேலத்தில் நடைபெற்ற மாநாட்டின் போது ராமர், சீதை உருவங்களை உடையின்றி எடுத்து வந்து செதருப்பால் அடித்தாக நடிகர் ரஜினிகாந்த் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. பெரியாரை இழிவுப்படுத்தும் வகையில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என பல்வேறு அமைப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தினை கண்டித்து, கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தபெதிக, திவிக, விசிக, திராவிடர் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். அப்போது ரஜினியின் உருவபடத்தை கிழித்து போராட்டம் நடத்தினர். பெரியாரை இழிவுபடுத்தும் நோக்கில் நடிகர் ரஜினிகாந்த் ஆதாரமற்ற கருத்தினை கூறியிருப்பதாகவும், அவரது கருத்தினை திரும்ப பெறும்வரை போராட்டம் நடத்தப்படுமென போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 60 க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர்.