April 13, 2020
தண்டோரா குழு
முக கவசம் அணியாமல் மக்கள் வெளியே வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றனர். இன்று வரை கொரோனா உறுதி செய்யப்பட்ட 126 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கோவை மாவட்டத்தில் பொது வெளியில் அனைத்து தரப்பினரும் கட்டாயம் முககவசம் அணிய வேண்டுமென மாவட்ட ஆட்சியர் ராசாமணி அறிவுறுத்தியுள்ளார்.
அத்தியாவசிய தேவைகளுக்காக வருபவர்கள், அரசு அதிகாரிகள், காவல் துறையினர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் எனவும், முகக்கவசம் இல்லாமல் பொதுமக்கள் வெளியே வந்தால் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார். கொரோனா அறிகுறி இருந்தும் சிகிச்சை பெறாமல் இருப்பவர்கள் மீது தொற்றுநோய் தடுப்புச் சட்டம் மற்றும் பொதுச் சுகாதார சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், தன்னார்வலர்கள் சமைத்த உணவுகளை நேரடியாக விநியோகிப்பதை தவிர்க்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், ஆனைமலை, பொள்ளாச்சி வடக்கு, பொள்ளாச்சி தெற்கு, மதுக்கரை, அன்னூர், மேட்டுப்பாளையம் ஆகிய ஊரக பகுதிகளில் குறிப்பிட்ட பகுதிகளிலும், மாநகரில் சுந்தராபுரம், குனியமுத்தூர், உக்கடம், பூமார்க்கெட், ஆர்.எஸ்.புரம், கே.கே.புதூர், கவுண்டம்பாளையம், சேரன்மாநகர் உள்ளிட்ட பகுதிகளில் குறிப்பிட்ட பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது, இப்பகுதிகளில் உள்ளவர்கள் வெளியே வரவும், வெளியாட்கள் உள்ளே செல்லவும் தடை விதித்து ஆட்சியர் ராசாமணி உத்தரவிட்டுள்ளார்.