May 2, 2018
தண்டோரா குழு
கோவை குட்கா விவகாரத்தில் தி.மு.க இன்று முற்றுகை போராட்டம் அறிவித்துள்ள பஜார் நிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கோவை, கண்ணம்பாளையத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டுவந்த குட்கா தொழிற்சாலையில், போலீஸார் கடந்த வாரம் சோதனை நடத்தினர்.இந்த சோதனையில், 75.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான போதை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், இதுதொடர்பாக ஆலையின் மேலாளர் உள்பட 4 பேரை போலீஸார் கைது செய்தனர். இதனிடையே,இந்த விவகாரத்தில் போராட்டம் நடத்திய சிங்காநல்லூர் தி.மு.க எம்.எல்.ஏ கார்த்திக் உள்ளிட்டோர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து,தி.மு.க-வின் முன்னாள் ஊராட்சி தலைவர் தளபதி முருகேசன் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.மேலும், அந்த குட்கா ஆலைக்கு,தளபதி முருகேசன் உதவி செய்ததாக, கோவை மாவட்ட எஸ்.பி. மூர்த்தி கூறியிருந்தார்.இது, தி.மு.க-வினர் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு, தி.மு.க செயல்தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்திருத்தனர்.
இந்நிலையில்,இந்த விவகாரத்தில் காவல்துறையை கண்டித்து, கோவை எஸ்.பி. அலுவலகம் இன்று முற்றுகையிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.இதையடுத்து,கோவை மாவட்டம் முழுவதுமே இன்று காலை முதல் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படுள்ளது.குறிப்பாக, கோவை எஸ்.பி. அலுவலகம், போலீஸ் கமிஷனர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அ.தி.மு.க அலுவலகம், அ.தி.மு.க எம்.எல் அம்மன் அர்ஜூனன் அலுவலகம் போன்ற இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் முழுவதும் சுமார் 2,000 போலீஸார்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர். இதனிடையே,புறநகர் பகுதிகளில் இருந்து, தி.மு.க-வைச் சேர்ந்த சிலர்,முற்றுகை போராட்டத்துக்கு புறப்பட்டு வரும் வழியில் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.அதேபோல,கணியூர் டோல்கேட் போன்ற பகுதிகளல் போலீஸார் மப்ட்டியில் வலம் வருவதாகவும் கூறப்படுகிறது.
ஆனால்,அதையும் மீறி 200-க்கும் மேற்பட்ட தி.மு.க-வினர்,எஸ்.பி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.அப்போது, தி.மு.க-வினர் மீது போடப்பட்டுள்ள வழக்கை திரும்பப் பெற வேண்டும்.குட்கா விவகாரத்தில் சம்மந்தப்பட்டுள்ள ஆளுங்கட்சி பிரமுகர்களை கைது செய்யவேண்டும்.குட்காவுடன் கூட்டணி வைத்த,அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி மற்றும் விஜயபாஸ்கரை கைது செய்ய வேண்டும் என அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.தி.மு.க-வினரின் போராட்டத்தையடுத்து,கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து,ரயில்நிலையம் வரை சாலை முழுவதுமாக அடைக்கப்பட்டது.