April 2, 2021
தண்டோரா குழு
கோவை பேரூர் குப்பனூர் அருகே வீட்டின் பத்திரத்தை கொடுக்க மறுத்த மாமியாரை வெட்டிக்கொன்ற மருமகனை பேரூர் போலீசார் கைது செய்தனர்.
கோவை பேரூர் அடுத்த குப்பனூரை சேர்ந்தவர் சிவலிங்கம். இவரது மனைவி சாந்தாமணி. 100 நாட்கள் வேலை திட்டத்தில் வேலை செய்து வந்தார். இவர் தனது மகள் மோகனப்பிரியா மற்றும் மருமகன் சதாசிவத்துடன் வசித்து வந்தனர்.
மருமகன் சதாசிவம், சாந்தாமணியின் வீட்டின் பத்திரத்தை கொடுக்க வலியுறுத்தி அடிக்கடி தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இந்நிலையில் இன்று மீண்டும் வீட்டிற்கு வந்த சதாசிவம் சாந்தாமணியிடம் பத்திரத்தை கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார்.தொடர்ந்து பத்திரத்தை சாந்தாமணி கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த சதாசிவம், அங்கிருந்த அரிவாளை எடுத்து சாந்தாமணியை வெட்டி கொலை செய்தார்.அவரது சத்தம் கேட்டு அங்கு வந்தவர்களையும் அரிவாளை காட்டி மிரட்டியதோடு, வீட்டின் கதவையும் பூட்டிக்கொண்டு அருகே வந்தால் தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டல் விடுத்துள்ளார்.
இதையடுத்து அங்கிருந்தவர்கள் பேரூர் போலீசுக்கு தகவல் அளித்தனர், அங்கு வந்த போலீசார் சதாசிவத்தை சமாதனப்படுத்தி வெளியே அழைத்து வந்து கைது செய்தனர். மேலும் சாந்தாமணியின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சதாசிவத்தை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.