July 13, 2018
தண்டோரா குழு
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் சி.பி.ஐ அதிகாரிகள் எனக் கூறி மருந்தக உரிமையாளாரிடம் 50 லட்சம் பணம் கேட்டு மிரட்டியதாக முன்னாள் காவலர் உட்பட 4 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் சத்யா என்பவர் மருந்துக்கடை நடத்தி வருக்கிறார். இந்நிலையில்,அவரது கடைக்கு நேற்று மாலை சி.பி.ஐ அதிகாரிகள் என கூறிக்கொண்டு 7 பேர் சென்றுள்ளனர்.அப்போது,முறையாக மருத்துவம் படிக்காமல் மருத்துவம் பார்ப்பதாக புகார்கள் வந்திருப்பதால் சத்யாவை கைது செய்வதாக அவர்கள் கூறியுள்ளனர்.மேலும்,கைது செய்யாமல் இருக்க 50 லட்சம் ரூபாய் பணம் கொடுக்க வேண்டும் என்றும் மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து,வீட்டில் இருந்தவர்களை தனித்தனி அறைகளில் அடைத்ததுடன்,ஏ.டி.எம் கார்டு மூலம் 40 ஆயிரம் பணத்தையும் எடுத்துள்ளனர்.இந்நிலையில்,இது குறித்து சத்யாவின் உறவினர்கள் காவல் துறையில் புகார் அளித்தனர்.சத்யாவின் வீட்டிற்கு கருமத்தம்பட்டி காவல் துறையினர் சென்றனர். அப்போது,அங்கிருந்தவர்களில் மூன்று பேர் தப்பி ஓடினர்.பெருமாள்,மதுரை வீரன்,மகேஷ்வரன், இளையராஜா ஆகிய 4 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.
அப்போது அவர்கள் சிபிஐ அதிகாரிகள் அல்ல என்பதும் மிரட்டி பணம் பறிக்க வந்த கும்பல் என்பதும் தெரியவந்தது.இதில்,கைது செய்யப்பட்டவர்களில் பெருமாள் என்பவர் காவல்துறையில் பணியாற்றி பணிநீக்கம் செய்யப்பட்டவர் என்பதும் அவர் பணியில் இருக்கும் டி.எஸ்.பி ஒருவருடன் அடிக்கடி பேசி இருப்பதும் தெரியவந்துள்ளது.இதையடுத்து அவர்களிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.