August 30, 2023 தண்டோரா குழு
கோவையில் மத நல்லிணக்கம் மலரவும், பருவ மழை பொழியவும் வேண்டி கோவை நாகசக்தி பீடத்தில் சர்வ சமயத்தினர் கலந்து கொண்ட சர்வசமய கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது.
கோவை மலுமிச்சம்பட்டியில் உள்ள ஸ்ரீ நாகசக்தி பீடத்தில்,ஸ்ரீலஸ்ரீ சிவ சண்முகசுந்தர பாபுஜி சுவாமிகள், பல்வேறு மத நல்லிணக்க பணிகள் மற்றும் ஆன்மீக பணிகளை செய்து வருகின்றார்.குறிப்பாக கொரோனா போன்ற பேரிடர் நேரங்களில் உலக மக்கள் நலன் கருதி நில வேம்பு கசாயம் வழங்கியது,யாகங்கள் செய்வது என அனைவரின் கவனத்தையும் ஈர்த்து பொதுமக்களின் நன்மதிப்பை பெற்றவர்.
இந்த நிலையில் கோவையில் அமைதி நிலவ வேண்டி இந்துக்கள், இஸ்லாமியர்கள்,கிறிஸ்தவர்கள் சர்வ சமய பிரதிநிதிகள் அனைவரும் ஒன்று கூடி, அமைதி ஜோதி என்ற அணையா விளக்கு ஏற்றும் நிகழ்வு மலுமிச்சம்பட்டி ஸ்ரீ நாகசக்தி அம்மன் பீடத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது.ஸ்ரீ நாகசக்தி பீடத்தின் விஸ்வகர்மா ஜகத்குரு ஸ்ரீலஸ்ரீ பாபுஜி சுவாமிகள்,ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இதில் பா.ஜ.க.வின் சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம், நியூ லைப் தேவாலயத்தின் பாதர் இமானுவேல் ஜோசப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அமைதி மற்றும் பருவ மழை பெய்ய வேண்டியும், நடந்த இந்த பிராத்தனையில், நாட்டு மக்கள் நலமுடன் வளமுடன் செழிப்பாக வாழ, மத நல்லிணக்கம் மலர்ந்து மக்கள் அமைதியான நிலையில் வாழ வேண்டும் என்ற பிராத்தனைகளும் இடம் பெற்றன.நீரின்றி அமையாது உலகு என்பதன் அடிப்படையில்,இந்த உலகிற்கு நீர் அவசியமான ஒன்றாக பார்க்கப்படுவதனால், மழை வேண்டியும் நீர் வேண்டியும் பிராத்தனை நடைபெற்றன.
நாட்டில் நல்லிணக்க மலர்ந்து பொதுமக்கள் அனைவரும் அமைதியான சூழலில் வாழ வேண்டும் என தெரிவித்த பாபுஜி இது குறித்த மத நல்லிணக்கில் தொடர்ந்து ஈடுபடுவதாக தெரிவித்தார்.தொடர்ந்து பேசிய வேலூர் இப்ராஹீம் மத நல்லிணக்கத்தை பாதுகாக்க அனைத்து சமயத்தினரும் முன் வரவேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
தமிழ்நாட்டின் முதல்வராக பொறுப்பு வகித்த முன்னாள் முதல்வர் , தற்போதைய சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி புரட்சி தமிழன் என்ற பட்டத்துக்கு உரித்தானவர்,என கூறிய பாபுஜி சுவாமிகள் அவரால் அந்த பட்டத்திற்கு பெருமை என புகழாரம் சூட்டினார்.