January 5, 2022
தண்டோரா குழு
கோவையில் போதையில் குளத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டார்.
கோவை உக்கடம் பெரியகுளத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என கோவை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் அழைத்து மிரட்டல் விடுக்கப்பட்டது.மிரட்டல் விடுத்த அழைப்பேசி எண்ணை கொண்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
இதற்கிடையே, உக்கடம் குளமும் வெடிகுண்டு நிபுணர்களால் பரிசோதிக்கப்பட்டது. தொடர்ந்து, மிரட்டல் விடுத்த நபர் குனியமுத்தூரை சேர்ந்த பீர்முகமது என்பதும், அவர் கஞ்சா போதையில் மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது.
பீர்முகமதுவை குனியமுத்தூர் போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
ஏற்கனவே, கடந்த 2018, 2021 ஆம் ஆண்டுகளிலும் மெரினா கடற்கரை உட்பட இடங்களில் இதேபோன்று போன் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.