January 22, 2018
தண்டோரா குழு
கோவையில் பேருந்து கட்டண உயர்வை கண்டித்து, சாய் கணேஷ் என்பவர் வாக்காளர் அடையாள அட்டையை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்தார்.
அண்மையில் தமிழக அரசு பேருந்து கட்டணங்களை உயர்த்தியதை கண்டித்து, தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த சாய் கணேஷ் என்பவர் பேருந்து கட்டண உயர்வை கண்டித்து, தனது வாக்காளர் அடையாள அட்டையை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்தார்.
சென்னையை சேர்ந்த சாய் கணேஷ் கோவையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருவதாகவும், பேருந்து கட்டண உயர்வு பொதுமக்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தி இருப்பதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைப்பதாக சாய்கணேஷ் தெரிவித்தார். சாய் கணேஷின் இந்த செயலுக்கு ஆதரவாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த ஒரு சிலர் பேசியதால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.