February 2, 2018
தண்டோரா குழு
கோவை அன்னூரில் பெண்ணை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவத்தில் வடமாநில கொள்ளையர்கள் 3 பேரை மேற்குவங்கத்தில் கோவை தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கோவை மாவட்டம் அன்னூரை அடுத்த கனுவக்கரை கிராமத்தை சேர்ந்த விவசாயியான மயில்சாமி,தனது மனைவி ராஜாமணியுடன் அங்குள்ள தோட்டத்து வீட்டில் வசித்து வந்தார். கடந்த 25ஆம் தேதி மயில்சாமியின் தோட்டத்து வீட்டில் டைல்ஸ் பதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த வடமாநில தொழிலாளர்கள் 3 பேர், ராஜாமணியை கொடூரமாகத் தாக்கிக் கொலை செய்தனர். இதுமட்டுமின்றி மயில்சாமியின் மீது மின்சாரத்தை பாய்ச்சி கொலை செய்ய முயற்சி செய்து விட்டு, வீட்டிலிருந்த நகைகள் மற்றும் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றனர்.
இதனையடுத்து, கொலை மற்றும் கொள்ளை குறித்து வழக்குப் பதிவு செய்த கோவை போலீசார் கொள்ளையர்களை வேலைக்கு அழைத்து வந்த ஒப்பந்ததாரரிடம் விசாரணை நடத்தினர். அதில் கொள்ளையர்கள் மேற்குவங்கத்தைச் சேர்ந்த சாம்ராஜ் ,பிந்து மற்றும் அஜய் என்பது தெரியவந்தது.
இதையடுத்து மேற்குவங்கதிற்கு விரைந்த கோவை தனிப்படை போலீசார்,மேற்குவங்க மாநிலம் சிலிகுரியில் பதுங்கியிருந்த கொள்ளையர்கள் மூவரையும் கைது செய்தனர். இதனையடுத்து, அவர்கள் அனைவரையும் இன்று மாலை அல்லது நாளைக்குள் கோவை அழைத்து வரவுள்ளனர்.