March 4, 2020
தண்டோரா குழு
கோவையில் பூனைக்குட்டியை முழுங்கிய நாகப்பாம்பினை பிடிக்க முயன்ற போது, பூனைக்குட்டியை கக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
கோவை சொக்கம்புதூர் சாலையில் உள்ள பொன்னுசாமி நாயுடு லேஅவுட் பகுதியை சேர்ந்தவர் பார்த்தசாரதி. இவரது வீட்டில் உள்ள பூனை 3 நாட்களுக்கு முன்பு 3 குட்டிகளை ஈன்றியது. இந்நிலையில் இன்று காலை பார்த்தசாரதி வீட்டில் சுமார் 5 அடி நீளமுள்ள நாகப்பாம்பு ஒன்று நுழைந்துள்ளது. அப்போது அங்கிருந்த ஒரு பூனைக்குட்டியை நாகப்பாம்பு முழுங்கியுள்ளது. பூனைக்குட்டியை முழுங்கி நகர முடியாமல் இருந்த நாகப்பாம்பினை, தாய் பூனை விரட்டியதால் ஒரிடத்தில் பதுங்கி கொண்டது. இதை கவனித்த பார்த்தசாரதி வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். வனத்துறை தகவலின் பேரில் பாம்பு பிடிப்பவர்கள் வந்து, நாகப்பாம்பினை பத்திரமாக மீட்டு வனப்பகுதிக்குள் விட்டனர்.
இதனிடையே பாம்பினை பிடிக்க முயன்ற போது, இறந்த நிலையில் இருந்த பூனைக்குட்டியை பாம்பு கக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.