July 3, 2018
தண்டோரா குழு
புதிய டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து காவல்துறை ஆணையாளரிடம் மனு அளித்தனர்.
கோவையில் இராமநாதபுரம் பகுதியில் 80 அடி சாலையில் மூடப்பட்ட டாஸ்மாக் கடை மீண்டும் திறக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து பொதுமக்கள் நேற்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது போலீசார் முறையாக இது குறித்து புகார் அளித்தால் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.இதனை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
பின்னர் இன்று கோவை மாவட்ட காவல்துறை ஆணையாளரிடம் மனு அளித்தனர்.அந்த மனுவில் அவர்கள் கூறியதாவது,இந்த பகுதியில் பள்ளிகள்,மருத்துவமனை,கோவில்கள் உள்ளன.மேலும் பள்ளி கல்லூரி மாணவ மாணவியர் வேலைக்கு செல்வோர் என அனைத்து தரப்பினரும் உபயோகப்படுத்தும் மிகவும் முக்கியமான சாலையாகும்.இந்நிலையில் ஏற்கனவே அடைக்கப்பட்ட இந்த கடையை மீண்டும் திறந்துள்ளனர்.
தற்போது தான் பொதுமக்கள் அனைவரும் நிம்மதியாக இருந்த நிலையில் மீண்டும் கடையை திறந்து உள்ளனர்.எனவே,இந்த கடையை நிரந்தரமாக அடைக்க வேண்டும் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லை என்றால் கடையை நிரந்தரமாக அடைக்கும் வரை நாங்கள் போராடுவோம் என்று குறிப்பிட்டிருந்தனர்.