July 15, 2021
தண்டோரா குழு
கோவை ராயல்கேர் மருத்துவமனையின் தலைவர் மருத்துவர் மாதேஷ்வரனை கடந்த 2020 அக்டோபர் மாதத்தில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை சேர்ந்த பன்னீர்செல்வம் உள்ளிட்ட 4 நபர்கள் தொடர்புகொண்டு மருத்துவமனை விரிவாக்கத்திற்கான கடன் ஏற்பாடு செய்து தருவதாக பொய் கூறி ரூபாய் 2 கோடியே 85 லட்சம் பணம் கமிஷனாக பெற்று ஏமாற்றி சென்றுள்ளனர். இது தொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில் கோவை மாநகர காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
கோவை மாநகர ஆணையர் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தது.இவ்வழக்கில் தலைமறைவாக இருந்த பன்னீர்செல்வம் வீடு, அலுவலகம் அமைந்துள்ள சென்னை அடையாறு மற்றும் புதுகோட்டை மாவட்டம் ஆலங்குடி ஆகிய இடங்களில் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் காவல்துறையினர் சோதனை செய்தனர்.
சோதனையின்போது ஏராளமான கையெழுத்திட்ட நிரப்பப்படாத முத்திரை தாள்கள், புரோ நோட்டுகள்,காசோலைகள், பல்வேறு நபர்களுடன் செய்துக்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் மற்றும் ஆவணங்கள் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டன.இந்நிலையில், சென்னையில் பதுங்கியிருந்த பன்னீர்செல்வம், செல்வகுமார் ஆகியோரை கோவை மாநகர குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர்.
மேலும், அவர்களிடமிருந்து இரண்டு சொகுசு கார்கள் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சைலேஷ் பிரபாகர் சிங்கர் என்பவர் பெயருக்கு அகமதாபாத் ஆக்சிஸ் வங்கியில் பெறப்பட்ட ரூ.49.85 கோடி மற்றும் அதே தொகையான ரூ.49. 85 கோடிக்கு 2 போலியான வரவோலைகளும் கைப்பற்றப்பட்டன.மேலும், கடந்த 2010 ஆம் ஆண்டு பன்னீர்செல்வம் கள்ளக்குறிச்சியை சேர்ந்த மாணிக்கம் என்பவரிடம் 2 கிலோ தங்கம் தருவதாக கூறி ரூபாய் 10 லட்சம் பெற்றுக்கொண்டு தங்கம் தராமல் ஏமாற்றியதுடன், அதற்கு கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டபோது ரூ.5 லட்சம் கள்ளநோட்டு வழங்கிய வழக்கு பன்னீர்செல்வம் மீது உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், பன்னீர்செல்வம் மீது தமிழகம் முழுவதும் 20 க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.