November 1, 2020
தண்டோரா குழு
சமூக இடைவெளி இன்றியும் பொதுமக்கள் பாதுகாப்பின்றியும் இருந்த காரணத்தால் கோவையில் பிரபல ஜவுளி நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை காலம் காரணமாக கடைவீதி, ஜவுளி கடைகள், நகை கடை போன்றவற்றில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. கொரோனா பரவல் காலத்தில் பொதுமக்கள் பொருட்கள் வாங்க கடைவீதிகளுக்கு படையெடுப்பதால் மக்களுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கோவை மாநகராட்சி சார்பில் மாநகராட்சி ஊழியர்கள் எமதர்ம ராஜா வேடமணிந்து கொரனா விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். முன்னதாக கோவை மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற துவக்க நிகழ்வில் கலந்துகொண்ட கோவை மாநகராட்சி ஆனையர் குமாரவேல் பாண்டியன் கொடியசைத்து பிரச்சார வாகனத்தை துவக்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாநகராட்சி ஆணையர்,
தமிழக அரசு, மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி சார்பில் எடுக்கபட்ட தடுப்பு நடவடிக்கை காரணமாக தற்போது கொரோனா தொற்று மாவட்டத்தில் குறைந்து நாள் ஒன்றிற்கு கொரோனா தொற்று உறுதியாகும் எண்ணிக்கையும் குறைக்கபட்டுள்ளது. இந்நிலையில், தற்போது பண்டிகை காலம் காரணமாக அதிகமாக மக்கள் கடைவீதிகளுக்கு பொருட்கள் வாங்க வரும் நிலையில் அவர்களுக்கு கொரனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மாநகராட்சி சார்பில் எம்தர்ம ராஜா வேடமணிந்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதாக தெரிவித்தார்.
மேலும் அனைத்து வணிகர்களையும் அழைத்து பேசி பண்டிகை காலத்தில் பின்பற்றி வேண்டிய கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைக்கபட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் அதிகமாக கூட்டமுள்ள கடைகளை கண்காணிக்க நான்கு மண்டலத்திலும் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கபட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தவர் வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றாத வணிக நிறுவனங்கள் மீது அபராதம் விதிக்கப்படும் எனவும் தொடர்ந்து பின்பற்றாத நிறுவனங்களை தற்காலிகமாக மூடும் நடவடிக்கையும் எடுக்கப்படுமெனவும் எச்சரித்தார்.
இதனையடுத்து விழிப்புணர்வு பேரணியில் கலந்துகொண்ட ஆனையர் கூட்டம் அதிகமுள்ள கடைகளில் உள்ள வாடிக்கையாளர்களை வெளியேற்றவும் உத்தரவிட்டார். இதனையடுத்து திடீர் ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி ஆனையர் சமூக இடைவெளி இன்றியும் பொதுமக்கள் பாதுகாப்பின்றியும் இருந்த காரணத்தால் கணபதி சில்கஸ் நிறுவனத்தற்கு ரூ.2லட்சமும், சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்திற்கு ரூ.1லட்சமும் அபராதம் அளித்து உத்தரவிட்டார்.